சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை துவக்கம் 9ல் தேரோட்டம்
6/30/2016 2:40:51 PM
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நாளை தொடங்குகிறது. 9ம்தேதி தேரோட்டம் நடக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன திருவிழா நாளை (1ம்தேதி) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. இதனையொட்டி நேற்று இரவு கோயிலில் உள்ள முக்குருணி விநாயகர் ஆலயத்தில் விக்னேஸ்வர பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து நடராஜர் அனுக்ஞை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.நாளை (1ம்தேதி) காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் கோயில் கொடி மரத்தில் உற்சவ ஆச்சார்யரால் கொடி ஏற்றப்படுகிறது. பின்னர் பஞ்சமூர்த்திகள் உள் மற்றும் வெளி பிரகாரங்களில் வலம் வருகின்றன. தொடர்ந்து 5ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சானில் சாமி வீதியுலா செல்கிறது.9ம்தேதி முக்கிய விழாவான தேர் திருவிழாவும், 10ம்தேதி அதிகாலை மகா அபிஷேகமும், மதியம் 3 மணியளவில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவும் நடக்கிறது. 11ம் தேதி இரவு முத்து பல்லக்கில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி நடராஜர் கோயில் பிரதான வாயிலான கீழ கோபுர வாயிலில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலிலும் கோயில் முழுவதிலும் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டு கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது.