மாங்கனி திருவிழா காரைக்கால் அம்மையார் இறைவனோடு ஐக்கியம்
6/20/2016 2:46:47 PM
காரைக்கால்: இறைவனின்(சிவ பெருமான்) திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையார் கோயில் காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ளது. இக்கோயிலில் பிரசித்திபெற்ற மாங்கனி திருவிழா கடந்த 17ம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் துவங்கியது.இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. மூன்றாம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சிவ பெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா வந்தார்.அப்போது பக்தர்கள் வீட்டு வாசல், மாடிகளில் இருந்து மாங்கனிகளை வாரி இறைத்து வேண்டுதலை நிறைவேற்றினர். இரவு காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு செல்லும் பிச்சாண்டவரை அம்மையார் எதிர்கொண்டு அழைத்து சென்று அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் பரம தத்தர் பாண்டிய நாடாகிய சித்தி விநாயகர் கோயிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு 2வது திருமணமும், அதைத் தொடர்ந்து புனிதவதியார் சித்தி விநாயகர் கோயிலுக்கு புஷ்ப பல்லக்கில் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இன்று அதிகாலை அம்மையார் இறைவனோடு ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கோயில் மற்றும் கோயிலை சுற்றி உள்ள வீதிகளில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு அம்மையார் ஜோதி வடிவமாக இறைவனோடு ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.