காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்: வாஷிங்டனில் பரபரப்பு
3/26/2023 5:18:57 PM
வாஷிங்டன்: வாஷிங்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் தப்பியோடிய பஞ்சாப் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். மேலும், இந்தியாவுக்கு எதிராக குரல்களை எழுப்பிய அவர்கள், அங்கு ெசய்தி சேகரிக்க சென்ற இந்திய பத்திரிகையாளர் லலித் ஜா மீது திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும் அவரை அசிங்கமான முறையில் திட்டினர்.
இதுகுறித்து லலித் ஜா கூறுகையில், ‘என்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், எனது பணிக்கு பாதுகாப்பு வழங்கிய போலீசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காலிஸ்தான் ஆதரவாளர்கள் எனது இடது காதில் இரண்டு குச்சிகளால் தாக்கினர். அப்போது போலீசார் தலையீட்டால் காப்பாற்றப்பட்டேன். போராட்டக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று போலீசாரை கேட்டுக் கொண்டேன்’ என்றார். பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான பயணிக்கு ஆடியோ மிரட்டல்
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான பயணி ஒருவரின் செல்போனுக்கு மிரட்டல் ஆடியோ அழைப்பு வந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட ஆடியோ அழைப்பில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தை முற்றுகையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் தேசியக் கொடியை கீழே இறக்கி காலிஸ்தான் கொடி அங்கு ஏற்றப்படும் என்றும் அந்த ஆடியோ அழைப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து அந்த பயணி கூறுகையில்:
காலிஸ்தான் ஆதரவாளர்களிடம் இருந்து வந்த ஆடியோ அழைப்பில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக ஆட்சேபகரமான விஷயங்களை கூறினர். தப்பியோடிய அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவாக கருத்து கூறினர் என்றார். மேற்கண்ட விவகாரம் தொடர்பாக விமான நிலைய போலீசார், ஐபிசி 153, 153 ஏ மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை தனிப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.