ஸ்ரீரங்கம் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் தங்கக்குடத்தில் புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலம்
6/24/2016 2:39:50 PM
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் இன்று நடந்தது. தங்க குடத்தில் புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பெருமாளுக்கு கடந்த 19ம்தேதி ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின், இன்று ரங்கநாச்சியார் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, காவிரியாற்றிலிருந்து ஒரு தங்க குடத்தில் எடுக்கப்பட்ட புனித நீரை கோயில் யானை மீது வைத்தும், 23 வெள்ளி குடங்களில் புனித நீரை அர்ச்சகர்கள் எடுத்து கொண்டும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு சென்றடைந்தனர்.அதன்பின்னர், தாயார் சன்னதியில் உற்சவர் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. தாயார் சன்னதியில் ஸ்ரீதேவிக்கும், பூதேவிக்கும் அரிய வகை மூலிகைகளால் தைலகாப்பு பூசப்பட்டது. தாயார் சன்னதியில் நகைகள் பழுது பார்க்கப்படும் பணியும், எடை சரிபார்க்கப்பட்டும் மாலை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
இரவு 8.30 மணிக்கு தாயாருக்கு மங்கள ஹாராத்தி நடக்கிறது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி, தாயார் சன்னதியில் இன்று முழுவதும் மூலவர் சேவை இல்லை.நாளை தாயார் சன்னதியில் திருப்பாவாடை எனப்படும் பொிய தளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி, நாளை காலை 7 மணிக்கு மூலஸ்தானத்திற்கு எதிரே தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் சாதம் குவிக்கப்படும். அதில் நெய், பலாச்சுளைகள், மாம்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் கலந்து தாயருக்கு நைவேத்தியம் செய்யப்படும். பின்னர் அன்னப்பிரசாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். மதியம் 1 மணியளவில் தாயாருக்கு மங்களஹாரத்தி நடைபெறுகிறது. அதன் பின் இன்று மாலை 4.30 மணிக்கு மேல் தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோயில் அலுவலர்கள் உள்பட பணியாளர்கள் செய்துள்ளனர்.