இன்று ராகு-கேது பெயர்ச்சி விழா: திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் சிறப்பு வழிபாடு
9/1/2020 3:00:55 PM
கும்பகோணம்: ராகு-கேது பெயர்ச்சி விழாவையொட்டி ராகு தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில், கேது தலமான கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் சுவாமி கோயில்களில் சிறப்பு லட்சார்ச்சனை வழிபாடு நடந்தது. ராகு-கேது பகவான்கள் ஒரு ராசியைக் கடந்து செல்ல ஒன்றரை ஆண்டுகள் (18 மாதங்கள்) ஆகின்றன. அதன்படி ராகு-கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கபடி செப்டம்பர் 23ம் தேதி நிகழ இருக்கிறது. இன்று (1ம் தேதி) மதியம் 2.16 மணிக்கு ராகு-கேது பெயர்ச்சியையொட்டி, 2.16மணிக்கு மிதுன ராசியில் உள்ள ராகு ரிஷப ராசிக்கும், தனுசு ராசியில் உள்ள கேது விருச்சிகம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இதையொட்டி மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளவேண்டும்.
நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலமாக போற்றப்படும் நாகநாதசுவாமி கோயில் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ளது. இங்கு நாககன்னி, நாகவல்லி என இருதேவியருடன் தனிசன்னதி கொண்டு ராகுபகவான் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இங்கு ராகுகாலத்தில் ராகுபகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. இந்நிலையில் ராகுபகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இன்று பகல் 2.16 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி கடந்த 30ம் தேதி மாலை 6 மணிக்கு ராகு பகவானுக்கு முதல் கால யாக பூஜையும், நேற்று காலை 2ம் கால யாக பூஜையும், மாலை 3ம் கால பூஜையும் நடந்தது. தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு 4ம் கால பூஜையும் சிறப்பு அபிஷேகமும் நடந்தது. அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை சிறப்பு ஹோமங்கள், அபிஷேக ஆராதனைகள், லட்சார்ச்சனை, தயிர் பள்ளயம், சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப அலங்காரம் நடைபெறுகிறது.
கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளதால் வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறக்கப்படுகிறது. அதன்படி, திருநாகேஸ்வரம் ராகு கோயிலும் திறக்கப்பட்டது. ராகு பெயர்ச்சி என்பதால் காலை 6 மணி முதல் பக்தர்கள் கோயிலுக்குள் சமூக இடைவெளியுடன் தரிசனத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அபிஷேகம் மற்றும் அர்ச்சனைகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மதியம் 1.30 மணிக்கு பூர்ணாஹூதி நிறைவு பெற்றது. கடம்புறப்பாடு மகாஅபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 2.16 மணிக்கு ராகு பெயர்ச்சி நேரத்தில் மகாதீபாராதனை நடைபெறுகிறது. ராகு பெயர்ச்சியின் போது அபிஷேகம், அலங்காரம் ஆகியவற்றை யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
இதேபோல் நவக்கிரகங்களில் கேது தலமான நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளத்தில் சவுந்தரநாயகி அம்மன் சமேத நாகநாதசுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு எமகண்ட காலத்தில் கேதுவுக்கு விசேஷ வழிபாடும், பூஜைகளும் நடைபெறும். இன்று கேது பெயர்ச்சி விழாவையொட்டி கேதுவுக்கு விசேஷ ஹோமம், அபிஷேகங்கள் நடைபெற்றது. அரசின் வழிகாட்டுமுறை படி பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.
ராகு கேது பெயர்ச்சியையொட்டி இன்று முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வழிபாட்டு தலமும் திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பாம்புரம்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா திருப்பாம்புரத்தில் வண்டுசேர்குழலி உடனாய அருள்மிகு பாம்புரநாதர் திருக்கோயில் உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக் கோயிலானது ராகுகேது பரிகார ஸ்தலமாக இருந்துவருகிறது. இக்கோயிலில் இன்று ராகு கேது பெயர்ச்சி விழா மதியம் 2.16 மணி அளவில் நடைபெறுவதையொட்டி ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெறும் நிகழ்ச்சி நடக்கிறது.