சோலார் மின் உற்பத்தி: மாதம் ரூ. 30,000 மிச்சம் ஸ்ரீரங்கம் கோயில் அசத்தல்
6/29/2016 2:59:49 PM
திருச்சி : பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பல்வேறு சன்னதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான சன்னதிகளில் பகல் நேரத்தில் கூட மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் மின் கட்டணமாக பெருந்தொகை செலவிடப்பட்டு வந்தது.கோயில் நிர்வாகம் மின்கட்டணத்தை குறைக்க ராமானுஜர் சன்னதியின் மேற்கூரையில் ரூ. 20 லட்சம் செலவில் 20 கிலோ வோல்ட் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தை 2 மாதத்திற்கு முன் நிறைவேற்றியது.இதையடுத்து கடந்த 2 மாதமாக ராமானுஜர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, ரெங்கா விலாச மண்டபம் மற்றும் கோயில் நிர்வாக அலுவலகம் ஆகிய பகுதிகளில் சூரிய மின் ஒளியால் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் மாதத்திற்கு ரூ.30 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணம் குறைந்துள்ளது.