பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
9/3/2014 3:45:00 PM
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்ற 2 லட்சத்து 30 ஆயிரத்து 701 பேரும், பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்த 3 லட்சத்து 76 ஆயிரத்து 719 பேரும் வேலையில்லாமல் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 10 ஆண்டுகளுக்கு முன் படிப்பை முடித்தவர்கள். தமிழக அரசு கடைபிடிக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் இவர்களுக்கு வேலைகிடைப்பது குதிரைக் கொம்பாக மாறியிருக்கிறது.முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, அதில் அவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் புதிய முறையை கடைபிடிப்பது சரியல்ல.
வேலைவாய்ப்பில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி கைதாகி வருகின்றனர். முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மனம் உடைந்த 4 பேர் நேற்று முன்தினம் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலைக்கு சென்று உயிர் பிழைத்துள்ளனர். இதற்குப்பிறகும் அரசு மனமிறங்கி இவர்களுடன் பேச்சு நடத்த முன்வராதது ஜனநாயக செயல்பாடாக தோன்றவில்லை. ஆசிரியர்கள் அறிவை வழங்குபவர்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தேவையற்ற பிடிவாதம் காட்டுவதை விடுத்து சம்பந்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யவும், தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.