ஆண்டாள் கோயிலில் மார்கழி கொண்டாட்டம்
12/22/2016 5:59:48 PM
அரங்கனை மணமுடிக்க, திருப்பாவை பாடி ஆண்டாள் விரதமிருந்த மாதம் மார்கழி. எனவே விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி உற்சவம் களை கட்டுகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் பிறக்கும் நேரத்தில், நள்ளிரவிலும் ஆண்டாள் கோயிலின் நடை திறக்கப்பட்டு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்திருந்து, ஆண்டாள் மற்றும் ஸ்ரீரெங்கமன்னாரை தரிசித்து செல்வர். மாதங்களில் நான் மார்கழி என கீதையில் கண்ணன் அருளியதால், நோன்பிருக்க இந்த மாதத்தை தேர்ந்தெடுத்தார் கோதை நாச்சியார் என்கின்றனர் திருவில்லிபுத்தூர் மக்கள். மார்கழி முழுவதும தினமும் அதிகாலை எழுந்து நீராடி, அரங்கனைப் பாடி, அவரையே மணாளனாக அடைந்தாள் ஆண்டாள்.
ஆண்டாள் முன்பு அம்மானை விளையாட்டு, பஞ்சாங்கம் படித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தினமும் அதிகாலை நடை திறக்கபட்டு விஸ்வரூபம், திருப்பள்ளி எழுச்சி, திருப்பல்லாண்டு, திருப்பாவை பாடப்படுகிறது. வரும் 29ம் தேதி, ஆண்டாள் பிறந்த வீட்டிற்கு வரும் வைபவம் நடைபெறும். இதற்காக கோயிலில் ஆண்டாள் வசித்த வீட்டில் பச்சை காய்கறிகளை பரப்பி வைப்பார்கள். பகல் பத்து, ராப்பத்து மற்றும் எண்ணெய் காப்பு உற்சவம் என கொண்டாட்டங்கள் தொடரும். ராப்பத்து முடிந்த பின்னர் பிரியாவிடை நிகழச்சி நடைபெறும். தான் பாவை நோன்பு இருக்கப் போகிறேன் என பெரிய பெருமாளிடம் வேண்டிக் கொண்டு புறப்படுகிறார் ஆண்டாள் என்பது ஐதீகம்.
கோயிலில் ஆண்டாள் நோன்பிருந்த மண்டபத்தில் எண்ணெய் காப்பு உற்சவம் நடைபெறும். 64 அரிய வகை மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெயில் 8 நாட்கள் நீராட்டு நிகழச்சி நடைபெறும். இந்த நாட்களில் ஆண்டாள் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் காட்சி அளிப்பார். தங்க சீப்பில் தலைவாரி, மதிப்பு மிக்க ஆபரணங்களை அணிந்து காட்சியளிப்பார்.
தனது அலங்காரத்தை ஆண்டாள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அர்ச்சர்கள் கண்ணாடியை அவர் முன்பு இன்றும் காட்டுகின்றனர். கடவுளை அடைய கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம், பக்தியோகம் என பல வழிகள் இருந்தாலும், பக்தி யோகமே சிறந்தது என்பதை உணர்த்தும் மாதம் இது. பக்தியில் மூழ்கி, அதிலேயே திளைத்து, கடவுளை அடைந்தார் ஆண்டாள் என்ற தத்துவத்தை உணர்த்தும் மாதம் மார்கழி.