பெரம்பலூர் அருகே அரவானுக்கு ரத்தசோறு படையல் பக்தர்கள் குவிந்தனர்
6/20/2016 2:47:13 PM
பெரம்பலூர்; ராமாயண காலத்தில் சீதையைத்தேடி தென்திசை நோக்கிச்சென்ற ராமன் வானர நண்பன் சுக்ரீவனுக்காக வாலியை வதம் செய்த பகுதி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாலிகண்டபுரம் என்று கூறப்படுகிறது. வாலி சிவனை வழிபட்டதால் இங்குள்ள சிவன்கோயில் வாலீஸ்வரர் கோயில் எனப் பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.ராமாயணத்தைப் போல் இவ்வூரில் மகாபாரதத்தில் போருக்கு முன்னால் போரில் வெற்றி பெறுவதற்காக பாண்டவர்கள் அரவானைக் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஊருக்கு வட திசையில் உள்ள திரவுபதியம்மன் கோயிலில் விமரிசையாகக் கொண்டாடப்படும்.
கடந்த 9ம் தேதி கோயிலில் காப்பு கட்டப்பட்டது. விழாவுக்கு முந்தைய 18 நாட்களும் மகாபாரத நாடகங்கள் நடந்து வந்தது. அதில் முனிக்கு சோறு ஊட்டுதல், பூவாலைக்கன்னி பூவெடுத்தல், திரவுபதி கல்யாணம், துரியோதனன், கவுரவர்கள், பாண்டவர்கள் முன்னிலையில் திரவுபதியை துகிலுரிதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் நல்லரவான் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு அப்பகுதி கிராம மக்கள் திரவுபதியம்மன் கோயிலில் கூடினர்.அங்கு 30 அடி நீளத்திற்கு படுத்திருக்கும் நிலையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரவான் சிலையின் முன் பலி கொடுக்கப்பட்ட ரத்த சோறு படைக்கப்பட்டது.
அந்த ரத்தசோற்றை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து காத்திருந்த, குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், திருமணமாகாத பெண்கள் பக்தியுடன் வாங்கி சாப்பிட்டனர். தொடர்ந்து நல்லரவான் பலி கொடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.பிறகு பெண்கள் தலை கவிழ்ந்து காத்திருக்க அவர்களின் தலையில் காளி முறத்தால் அடித்துப் பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.இவற்றைக் காண பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.