திருப்போரூர் அருகே திரவுபதி அம்மன் கோயில் தீ மிதி விழா
6/27/2016 2:40:47 PM
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு கிராமத்தில் கடந்த 8ம் தேதி அக்னி வசந்த விழா தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.கடந்த 21ம் தேதி அர்ஜுனன் தபசு உற்சவமும், நேற்று காலை துரியோதனன் படுகளம் மற்றும் திரவுபதி கூந்தல் முடிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று மாலை 6 மணிக்கு தீ மிதி திருவிழாவும் நடைபெற்றது.இதற்காக 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்தனர். நேற்று மாலை 5 மணிக்கு குடத்தில் கத்தி நிறுத்தி உத்தரவு பெறும் வைபவம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசுவாமி கோயில் திருக்குளத்தில் இருந்து பக்தர்கள் நீராடி, ஈர உடையுடன் ஊர்வலமாக வந்து, திரவுபதி அம்மன் கோயில் வளாகம் முன்பு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் தீ மிதித்தனர்.இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, தருமர் பட்டாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி திருப்போரூர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.தீ மிதி விழாவை ஒட்டி 18 நாட்களும் புரிசை ஆராவமுதனின் மகாபாரத சொற்பொழிவும், வையாவூர் பூபதி குழுவினரின் தெருக்கூத்தும் நடைபெற்றது.