திருவாரூரில் 16ல் ஆழித்தேரோட்டம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
6/14/2016 2:33:00 PM
திருவாரூர்: திருவாரூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜர் சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் நாளை மறுநாள்(16ம் தேதி) நடக்கிறது. அன்று காலை 7.30 மணியளவில் கீழவீதியில் உள்ள நிலையடியில் இருந்து ஆழித்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஆழித்தேருக்கு பின்னால் அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன. நாளை (15ம் தேதி) காலை 6 மணியளவில் விநாயகர் மற்றும் சுப்ரமணியர் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படும். தேரோட்டத்துக்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
திருவாரூரில் நாளையும்(15ம் தேதி), நாளை மறுதினமும்(16ம் தேதி) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, சிதம்பரம், மயிலாடுதுறை, நன்னிலம் வழியாக திருவாரூர் நகருக்கு வரும் கனரக வாகனங்கள், கங்களாஞ்சேரியில் நிறுத்தப்பட்டு மத்திய பல்கலைக்கழகம், வடகண்டம், திருக்கண்ணமங்கை, காட்டூர், பவித்திரமாணிக்கம், விளமல் கல்பாலம் வழியாக தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை அடைந்து திருவாரூர் நகருக்குள் வர அனுமதிக்கப்படும்.
திருவாரூரிலிருந்து சென்னை, மயிலாடுதுறை, நன்னிலம் வழியாக செல்லும் பஸ்கள் மேற்படி இதே மார்க்கத்தில் செல்ல அனுமதிக்கப்படும்.மயிலாடுதுறை, நன்னிலத்தில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள் பிடாரி கோயில் தெரு, முடுக்குத்தெரு, அய்யனார் கோயில் தெரு, நேதாஜி ரோடு, பேபி டாக்கிஸ் ரோடு வழியாக பேருந்து நிலையம் செல்ல அனுமதிக்கப்படும். அன்னதானம் வழங்க காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். வாணவேடிக்கை நடத்த அனுமதியில்லை. நாளை மறுநாள் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.