நாராயணபுரம் செல்லியம்மன் கோயிலில் தீமிதி விழா
6/13/2016 2:16:17 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த நாராயணபுரம் ஸ்ரீசெல்லியம்மன் அம்மன் கோயில் 14ம் ஆண்டு தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவுக்கு முன்னாள் ஊராட்சித் தலைவர் கே.வி.எஸ்.குபேரன் தலைமை வகித்தார். விழாவையொட்டி அம்மனுக்கு கடந்த 3ம் தேதி மகா அபிஷேகமும், காப்பு கட்டுதலும் நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் அம்மன் கரகம் வீதியுலா நடந்தது. நேற்று பகல் 12 மணிக்கு அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு கிராம பெண்கள் ஒன்றுகூடி, கோயில் முன்பு பொங்கலிட்டும், அம்மனுக்கு படையலிட்டும் வழிபட்டனர். இரவு 7 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.இரவு 8 மணிக்கு உற்சவர் செல்லியம்மன் வண்ண மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வாணவேடிக்கை முழங்க திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், அறங்காவலர் பி.எஸ்.முனிரத்தின நாயுடு உட்பட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.