ஸ்ரீரங்கத்தில் 19ம் தேதி பெரிய திருமஞ்சனம்
6/9/2016 2:25:31 PM
திருச்சி:ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் பெரிய திருமஞ்சனம்(ஜேஷ்டாபிஷேகம்), ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் நடத்தப்படும். பெரிய திருமஞ்சனம் வரும் 19ம் தேதி நடக்கிறது. அன்று காவிரி ஆற்றிலிருந்து தங்க குடத்தில் புனிதநீர், யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்படும்.மூலவருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை. அவரது திருமேனி சுதையால் செய்யப்பட்டதால் அரிய வகை மூலிகைகளில் தயாரான மணம் மிக்க தைலம் பெரிய பெருமாள் மீது பூசப்படும். 48 நாளுக்கு பிறகு தைலம் உலர்ந்த பின் தான் பெரிய பெருமாளின் திருமேனியை முழுமையாக தரிசிக்க முடியும். அதுவரை பெரிய பெருமாளின் திருமேனியில் முகத்தை மட்டுமே தரிசிக்க முடியும்.
மற்ற பகுதிகள் மெல்லிய துணியால் போர்த்தப்பட்டிருக்கும். மூலவர் பெரிய பெருமாளுக்கு பதிலாக உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கு 19ம் தேதி திருமஞ்சனம் நடைபெறும். அன்று தைலக்காப்பு பெரிய பெருமாள், நம்பெருமாள், உபயநாச்சியார் ஆகியோர் மேனிகளில் அணிவிக்கப்படும். திருவாபரணங்கள் அனைத்தும் உடனடியாக பழுது பார்த்தல், எடைகள் சரிபார்க்கும் பணியும் நடைபெறும்.20ம் தேதி திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடக்கும். அப்போது மூலஸ்தானம் எதிரே உள்ள மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் குவிக்கப்படும் அன்ன பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், வாழைப்பழம், நெய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சேர்க்கப்பட்ட சாதம் பெரிய பெருமாளுக்கு படைக்கப்படும். அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தைலக்காப்பு நிகழ்ச்சியையொட்டி அன்று மூலவர் சேவை இருக்காது.