சண்டிகேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் திருவாரூரில் இன்று நடந்தது
6/8/2016 2:48:30 PM
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் வரும் 16ம் தேதி நடைபெறுவதையொட்டி இன்று சண்டிகேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் நடந்தது.திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்கதாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் தியாகராஜ சுவாமி கோயில் திகழ்கிறது. இக்கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே 2வது மிகப்பெரியது. தேரில் பழுது ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2010ம் ஆண்டிற்கு பின்னர் தேரோட்டம் நடைபெறவில்லை. தேரை புதுப்பிப்பதற்காக கடந்த திமுக ஆட்சி காலத்தில் ரூ.2.17 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. நான்கரை ஆண்டுகள் வரை கிடப்பில் போடப்பட்ட பணி மீண்டும் துவங்கி முடிவடைந்தது. கடந்தாண்டு அக்டோபர் 26ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடந்தது. வரும் 16ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
இக்கோயிலுக்கு சொந்தமான சண்டிகேஸ்வரர் தேர் ரூ. 33 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் புதிதாக செய்யப்பட்டுள்ளது. தேர் வெள்ளோட்டம் இன்று காலை 6.30மணிக்கு கோலாகலமாக துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கீழவீதி, தெற்குவீதி உள்பட முக்கிய வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது. வரும் 16ம் தேதி காலை 7.30மணிக்கு சுவாதி நட்சத்திரம், மிதுன லக்னத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளது. வரும் 15ம் தேதி காலை 6மணிக்கு விநாயகர் மற்றும் சுப்ரமணியர் தேரோட்டம் நடக்க உள்ளது.