சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜூலை 1ல் ஆனி திருமஞ்சன திருவிழா துவக்கம்
6/6/2016 2:27:27 PM
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா ஜூலை 1ம் தேதி துவங்குகிறது. 9ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுக்கு இரு திருவிழாக்கள் நடப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழாவும் நடக்கும்.ஆனி மாதத்தில் நடக்கும் ஆனித் திருமஞ்சன திருவிழா ஜூலை 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 2ம் தேதி இரவு வெள்ளி சந்திரபிரபை வாகனத்திலும், 3ம் தேதி தங்க சூர்யபிரபை வாகனத்திலும், 4ம் தேதி வெள்ளி பூத வாகனத்திலும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது.
5ம் தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சானில் சாமி வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. 6ம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 7ம் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 8ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வேடத்திலும் சாமி வீதியுலா நடக்கிறது.9ம் தேதி முக்கிய விழாவான தேர்த்திருவிழா நடக்கிறது. காலை 5 மணிக்கு மேல் மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமான் தேரில் எழுந்தருள்கின்றனர். இதனை தொடர்ந்து தனித்தனி தேர்களில் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.10ம் தேதி அதிகாலை கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு மகாபிஷேகமும், மதியம் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவும் நடக்கிறது. 11ம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதியுலா நடக்கிறது.