திரவுபதி அம்மன் கோயில் தீமிதி விழா
5/31/2016 2:24:32 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ராமஞ்சேரி திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று காலை அம்மனுக்கு மகா அபிஷேகமும், காப்பு கட்டுதலும், அம்மன் கரகம் வீதியுலாவும் நடந்தது. பகல் 12 மணிக்கு அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.மாலை 4 மணிக்கு கிராம பெண்கள் ஒன்றுகூடி, கோயில் முன்பு பொங்கலிட்டும், அம்மனுக்கு படையலிட்டும் வழிபட்டனர். இரவு 7 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இரவு 8 மணிக்கு உற்சவர் திரவுபதி அம்மன் வண்ண மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வாணவேடிக்கை முழங்க திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், வி.ஜி.ராஜேந்திரன்.எம்.எல்.ஏ., திமுக ஒன்றிய செயலாளர் டி.கிறிஸ்டி, ஐ.மகிமைதாஸ், டி.மோதிலால், பாலு, மகேந்திரன் உட்பட திராளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.