இன்று பவுர்ணமி திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்
5/21/2016 12:51:21 PM
திருவண்ணாமலை: பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் இன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் திருவண்ணாமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அதன்படி இந்தமாத(வைகாசி) பவுர்ணமி இன்று அதிகாலை 1.25 மணிக்கு தொடங்கியது. பவுர்ணமி தொடங்கியது முதல் திருவண்ணா மலையில் பக்தர்கள் கிரிவலம் வர ஆரம்பித்தனர்.
பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார்-உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிசேகங்கள் செய்யப்பட்டன. பொது தரிசனம், கட்டண தரிசனங்களில் பக்தர்கள் பல மணி நேரம் நீண்டகியூவில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர். கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நாளை அதிகாலை 3.11 மணிக்கு பவுர்ணமி நிறைவடைகிறது.