கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் குடியாத்தத்தில் கோலாகலம்
5/14/2016 12:11:59 PM
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி கடந்த 30ம் தேதி நடந்தது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து கடந்த 10ம் தேதி கெங்கையம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை ரத உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் சிரசு ஊர்வலம் இன்று நடந்தது.
அதிகாலை 3.30 மணியளவில் குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் வீற்றிருந்த கெங்கையம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து 5 மணியளவில் மேளதாளம் முழங்க, பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் அம்மன் சிரசு ஊர்வலம் தொடங்கியது. வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். ஆங்காங்கே பக்தர்கள் திரண்டு தேங்காய்கள் உடைத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் பல்வேறு சுவாமி வேடங்கள் அணிந்தபடி ஊர்வலத்தில் சென்றனர்.
அதேபோல் கோலாட்டம், மயிலாட்டம், புலியாட்டம் கரகாட்டம், சிலம்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் ஊர்வலத்தில் இடம்பெற்றன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தின் இடையே அம்மன் சிரசு ஊர்வலம் நீலிகோதண்டசெட்டி தெரு, காந்திரோடு, ஜவஹர்லால் நேரு தெரு, போடிபேட்டை வழியாக கோபாலபுரத்தில் உள்ள கங்கையம்மன் கோயிலை வந்தடைந்தது. அங்கு அலங்கரிக்கப்பட்ட சண்டாளச்சி உடலில் சிரசு பொருத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மனுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வேலூர், ஆம்பூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, அணைக்கட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து குடியாத்தத்திற்கு 40க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.