போர் அபாயம்?
3/10/2023 5:52:29 PM
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஆதரிப்பதில் நீண்டகால வரலாற்றை கொண்டுள்ளது பாகிஸ்தான். காஷ்மீரில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு அமைதியற்ற சூழலை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவின் மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் காரணமாக இரு தரப்பிலும் அதிகரித்து வரும் பதற்றங்களால் இரு நாடுகள் இடையே போர் ஏற்படும் ஆபத்து காணப்படுகிறது என அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. இதேபோன்று, கிழக்கு லடாக் எல்லை பகுதியில் படைகளை குவித்து, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு, இந்திய வீரர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனாவை பற்றியும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், 2020ம் ஆண்டு முதல் சீனாவுடனான எல்லை விவகாரம் அதிகரித்து காணப்படுகிறது. இரு நாடுகளும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் வழியே எல்லை விவகாரத்தில் தீர்வு கண்டுள்ளது. எனினும், எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்ட சூழலும் காணப்படுகிறது. இது கடந்த பல தசாப்தங்களில் இல்லாத வகையில் தீவிர கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என்றும் தெரிவித்து உள்ளது. அணுசக்தி நாடுகளான இந்தியாவும், சீனாவும் சர்ச்சைக்குரிய எல்லை விவகாரத்தில் படைகளை குவித்து வருவதனால், ஆயுத மோதலை ஏற்படுத்தும் ஆபத்து அதிகரித்து உள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் அதன் நலன்களுக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட கூடிய சாத்தியமும் உள்ளது.
அமெரிக்காவை தலையிட அழைக்க கூடிய நிலையும் காணப்படுகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது. மேலும், சீனா, ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு தீவிர அச்சுறுத்தலாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்து உள்ளது. கிழக்கு ஆசியாவில் முக்கிய சக்தி வாய்ந்த ஒன்றாகவும், உலக அரங்கில் பெரிய ஆற்றல் வாய்ந்த நாடாகவும் தன்னை நிலை நிறுத்த சீனா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிப்பதுடன், பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய பல நூறு ஏவுகணைகளையும் சீனா தயாரித்து வருகிறது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
அதேபோல, ரஷ்யா அடுத்த 10 ஆண்டுகளுக்கு முக்கிய விஷயங்களில் அதிகம் கணிக்க முடியாத அளவுக்கு சவாலாக இருக்கும். இதன்படி, அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுடன் நேரடியான ராணுவ மோதலை ரஷ்யா விரும்பாது என்ற போதிலும், அது நடப்பதற்கான சாத்தியமும் உள்ளது. சீனா, ரஷ்யா இடையேயான உறவு அமெரிக்காவுக்கு எதிரான ஆற்றல் வாய்ந்த அச்சுறுத்தலாக உள்ளது எனவும் அறிக்கை கூறுகிறது. ஈரான் நாடும், அமெரிக்க மக்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக ஹேக்கர்கள் துணையுடன் வலைதள தாக்குதல்களில் ஈடுபடும் சாத்தியம் அதிகம் உள்ளது. அணு ஆயுத திட்டங்களையும் விரிவுப்படுத்தி உள்ளது. வடகொரிய ராணுவமும் தனது அணு ஆயுத திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இவையெல்லாம் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.