நவம்பர் 29, 2018 வியாழக்கிழமை பொருளாதார மீட்சி
11/29/2018 2:40:21 PM
இந்தியப் பொருளாதாரம் தீவிர நெருக்கடியில் இருக்கிறது. ஆனாலும் மீட்கலாம் - அரசின் ஒத்துழைப்புடன். உள்நாட்டு மொத்த உற்பத்தி(ஜிடிபி) அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சிக் குறைவு, குடும்பச் சேமிப்பு 34ல் இருந்து 2017-ல் 24% ஆகச் சரிவு, நடைமுறையில் ஜிஎஸ்டி எதிர்பார்த்த பலனளிக்காமை, வங்கிகளின் வாராக்கடன் அதிகரிப்பு, அடித்தளக் கட்டமைப்புத் துறைகளுக்கு நிதி போதாமை, குறு, சிறு, நடுத்தரத் தொழில் வளர்ச்சி பெறாமை, இந்திய வேளாண் விளைபொருட்கள் உற்பத்தித்திறன் உயராமை போன்றவை பாதகங்கள். உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையேயும் இந்தியா பலமுறை மீண்டு வந்திருக்கிறது. இதற்குக் கைகொடுத்தது மக்களின் சேமிப்பு மனோபாவம். ஆனால் சேமிக்க முடியாமல் வரி விகிதங்களை அதிகப்படுத்தினால் என்ன செய்வது? சேமிப்பது என்ற இயல்பான உணர்வை ஊக்குவித்தாக வேண்டும். வங்கிகள் தரும் கடன்கள் மீதான வட்டி நிச்சயம் குறைக்கப்பட வேண்டும். 9 சதவீதமாக இருப்பின் நல்லது. அதே சமயம் சேமிப்புக்கே வங்கிகள் பணம் வசூலிக்கத் துவங்கிவிடுமோ என்ற அச்சம் நடுத்தர வர்க்கத்தினரிடம் ஏற்பட்டிருக்கிறது. சேமிப்பு கணக்குக்கான ‘மினிமம் பேலன்ஸ்’ ரூ.1000 இருக்க வேண்டும் என்று வங்கிகள் பயமுறுத்துகின்றன. அவ்வாறு இல்லாதவர்களுக்கு அபராதம் விதிக்கின்றன. அபராத பணத்தை அவர்கள் கணக்கில் இருந்தே பிடித்துக் கொள்கின்றன. ஒரு காலத்தில் கடும் உணவு தானியப் பற்றாக்குறை இருந்தது. ‘பசுமைப் புரட்சி’ மூலம் தன்னிறைவு நாடாக மீண்டோம். 1991-ல் கடும் அன்னியச் செலாவணிப் பற்றாக்குறை. அதில் இருந்தும் மீண்டு வந்திருக்கிறோம். சுதந்திரத்திற்குப் பின் பல்வேறு நெருக்கடியான பொருளாதார நிலைகளில் இருந்து எளிதாக மீண்டுவந்த பழைய வரலாறே நம்பிக்கையை ஊட்டுகிறது; ஊட்ட வேண்டும்.
நமது பொருளாதாரக் கொள்கைகளை மட்டுமல்ல; நிர்வாகத்தையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வருமான வரி என்பது பெரும் சுமை. கடும் வரிகள் மூலம் கட்டாயப்படுத்தி எதையும் செய்யக் கூடாது என்பது மட்டுமல்ல; செய்யவும் முடியாது.
உலக அளவில் போட்டியிடக்கூடியதாக பொருளாதாரத்தை மாற்ற வேண்டும். பிற நாடுகளின் சந்தைகளையும் நவீனத் தொழில்நுட்பங்களையும் கையாள வேண்டும். தனி நபர்களும் குடும்பங்களும் தத்தமது வருவாயில் செலவு போக சேமிக்கும் அளவு குறைந்ததால்தான் நாட்டின் ஜிடிபி வளர்ச்சியும் சரிந்தது. மீண்டும் உள்நாட்டு சேமிப்பு 35% ஆவதற்கு அரசு ஊக்கமளிக்க வேண்டும். பொருளாதாரம் சீட்டுக்கட்டு போன்றது. ஏதாவது ஒரு சீட்டு உருவப்பட்டாலும் சரியும். பொதுமக்களின் வாழ்வாதாரப் போராட்டங்கள் இன்னும் தொடர்கின்றன. இதை மாற்றிக் காட்டுவதற்கான நேர்மறை அணுகுமுறை எதுவோ அதுவே நிஜப் பொருளாதார மீட்சிக்கான வழி. ஆனால் இதை ஆட்சியாளர்கள் நேர்மையுடன் ஒப்புக்கொள்வதில்லையே!