உயிரை போற்றுவோம்!
9/10/2020 5:24:24 PM
உலகில் ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒரு தற்கொலை நிகழ்கிறது. இதை தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 10ம் தேதி ‘உலக தற்கொலை தடுப்பு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியான தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவர்களில் 23.4 சதவீதம் பேர் தினக்கூலி வேலையில் இருந்தவர்கள். தற்கொலை செய்துகொண்ட 32,5631 தினக்கூலி தொழிலாளர்களில் 5,186 பேர் தமிழகத்தில் இறந்துள்ளனர். தற்கொலை செய்துகொண்ட தினக்கூலி தொழிலாளர்கள் பலரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் தினக்கூலியாக வேலைசெய்பவர்கள் அதிகம் இருப்பது கட்டட தொழிலில்தான். அவர்கள் வாங்கிய கடனை செலுத்த முடியாத காரணத்தால் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
மருத்துவ செலவு மற்றும் திருமணத்திற்காக செலவு செய்வதற்கு தினக்கூலி வேலையில் உள்ளவர்கள் கடன் பெறுகிறார்கள். வங்கிகளில் கடன் தருவதில்லை என்பதால், இவர்கள் தனியார் நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்குகிறார்கள். அதை செலுத்தமுடியாதபோது தற்கொலை செய்துகொள்கிறார்கள். தற்கொலை என்பது ஒருவரின் தனிப்பட்ட பிரச்னை அல்ல. அது அவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தையும் பெரிய அளவில் சமூகத்தையும் பாதிக்கும். மனச்சோர்வு, மனச்சிதைவு நோய், குடி மற்றும் போதை பழக்கம், குடும்ப சிக்கல், தேர்வில் தோல்வி, காதல் ஏமாற்றம், தொழிலில் கஷ்டம் போன்ற சூழல்கள் ஏற்படுத்தும் மனநலக் குறைபாட்டாலும் தற்கொலை எண்ணங்களும் முயற்சிகளும் வருகின்றன.
இதற்கான அறிகுறிகளாக, ஒருவர் எதிலும் நாட்டம் இல்லாமல் இருப்பது, தனிமைப்படுத்திக் கொள்ளுதல், தூக்கம் மற்றும் பசியின்மை, குடிப்பழக்கம் அதிகரித்தல், தகுதியற்றவன் என்ற எண்ணம், யாராலும், எதுவும் எனக்கு உதவ முடியாது என்ற எண்ணம் மற்றும் எதிர்காலத்தின்மீது நம்பிக்கை இல்லாத மனநிலை ஆகியவை உள்ளது. ஒருவருக்கு இத்தகைய எதிர்மறை எண்ணங்கள் உருவாகும் பொழுது தனிமைப்படுத்திக் கொள்ளாமல் நெருங்கிய உறவுகளைஅணுகவேண்டும். இந்த மனநிலை மற்றும் எண்ணங்களை பற்றி யாராவது உங்களிடம் கூறினால் அதனை காது கொடுத்து கேட்க வேண்டும்.
நமக்கு அனுபவம் உள்ள விஷயம் என்றால் அதற்கு ஆலோசனை வழங்கலாம். அவர்களை தனியாக விடாமல் ஆதரவு தரவேண்டும். நீங்கள் அருகில் இல்லை என்றால் அவருடன் இருப்பவர்களுக்கு இத்தகைய எண்ணம் குறித்து தெரிவிக்க வேண்டும். தற்கொலை என்பது தடுக்க முடிந்த இறப்பு, அதற்கு மனநல மருத்துவரை அணுகி தீர்வு பெற தயங்கக்கூடாது. ஏழை மக்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கு வருமானம் கிடைக்கச்செய்யும் பொறுப்பை அரசாங்கம் கையில் எடுக்கவேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். இல்லையேல் இந்த இறப்புகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.