முகமூடி கிழிப்பு!
9/9/2020 6:31:31 PM
இந்திய-சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது. அதை நமது வீரர்கள் தடுத்தனர். அப்போது இரு படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் நமது 20 வீரர்கள் வீர மரணமடைந்தனர். சீன வீரர்கள் 45 பேர் பலியானார்கள்.
இதையடுத்து எல்லைப் பிரச்னை தீவிரமடைந்தது. எல்லையில், நம் ராணுவம் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களும், தளவாடங்களும் குவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது முப்படைகளும், நாட்டின் எல்லையைச் சுற்றி தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
எல்லையில் அமைதியை ஏற்படுத்தவும், படைகளை திரும்பப் பெறவும், ராணுவ உயரதிகாரிகள் நிலையிலும், தூதரக நிலையிலும் பல சுற்று பேச்சுகள் நடந்தன. ஆனால், அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சமீபத்தில், ரஷ்யாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்ற இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன ராணுவ அமைச்சர் ஜெனரல் யீ பெங்கேயை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவின் நிலைப்பாட்டை மிகவும் உறுதியுடன் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ‘எல்லையில் அமைதி ஏற்பட, சீனா தன் படைகளை திரும்பப் பெற வேண்டும்’ என, அவர் திட்டவட்டமாக கூறினார்.
இந்நிலையில், ‘ஒப்பந்தத்தை மீறி, இந்தியா எல்லையில் ஆயுதங்களை பயன்படுத்தியது. அத்துமீறி எங்களுடைய எல்லைக்குள் நுழைந்ததுடன், துப்பாக்கியால் சுட்டது’ என, சீன ராணுவம் நேற்று முன்தினம் திடீர் குற்றச்சாட்டை கூறியது. இதை மறுத்தும், எல்லையில் நடந்த சம்பவம் குறித்தும், நம் ராணுவம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், ‘எந்த காலகட்டத்திலும், எந்த சூழ்நிலையிலும், எல்லையை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தும் எண்ணம் கூட, நம் ராணுவத்துக்கு வந்தது கிடையாது. ஆனால், செப். 7ம் தேதி இந்திய படைகள் சீனாவின் எல்லைக்குள் நுழைய முயன்றதாகவும், துப்பாக்கியால் சுட்டதாகவும், சீன ராணுவம் கூறியுள்ளது. இது முழுக்க முழுக்க பொய் செய்தி. உள்நாட்டில் மற்றும் சர்வதேச அளவில், பிரச்னையை திசை திருப்பும் நோக்கத்தில் இந்த பொய் செய்தியை சீனா கூறியுள்ளது.
உண்மையில், செப்., 7ம் தேதி, சீன ராணுவம் துப்பாக்கியால் சுட்டபடி எல்லையில் உள்ள நம் முன்கள நிலைகளை நோக்கி வந்தது. நம் எதிர்ப்பை அடுத்து, சீன படைகள் திரும்பிச் சென்றன. சீன ராணுவம் தான், ஒப்பந்தங்களை மீறி, எல்லையில் ஆயுதங்களை பயன்படுத்தி, பிரச்னையை தீவிரப்படுத்த முயற்சிக்கிறது’ என கூறியுள்ளது. எல்லையில், சீன ராணுவத்தினர் ஆயுதங்களுடன் இருக்கும் படங்களை, சில தனியார் ‘டிவி’க்கள் வெளியிட்டுள்ளன. அதில், இந்தியா-சீனா எல்லையில், சீன ராணுவத்தினர் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சில சீன வீரர்கள், கையில் நீண்ட ஈட்டி போன்ற ஆயுதங்களை வைத்துள்ளனர். ஒரு சிலர், நீண்ட துப்பாக்கியை வைத்துள்ளனர். ‘எல்லையில் இருக்கும்போது, இரு ராணுவமும் எந்த ஆயுதங்களையும் பயன்படுத்தக் கூடாது’ என, ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தை சீனா மீறியுள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதற்கு முன், 1975லும், இதுபோல், சீனா ஒப்பந்தத்தை மீறி, எல்லைக்குள் ஆயுதங்களை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.