‘வாடகைத் தாய்’ அறிவியல்
3/4/2019 3:21:29 PM
கருவை வளர்த்து குழந்தையாகப் பெற்றுத் தரும் பெண்ணைத்தான் ‘வாடகைத் தாய்’ என்கின்றனர். வாடகைத்தாய் விஷயத்தில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ‘ஜஸ்டேஷனல்’ வாடகைத்தாய். அதாவது தனக்குச் சம்பந்தமில்லாத, ஒரு கணவனின் உயிரணு மற்றும் அவரது மனைவியின் சினை முட்டையோடு சேர்ந்த கருவை, தன் கர்ப்பப் பையில் சுமக்கும் வாடகைத்தாய் முறை. மற்றொன்று ‘டிரெடிஷனல்’ வாடகைத்தாய். அதாவது, வாடகைத் தாயாக வரும் பெண் ஏதாவது ஒரு விதத்தில் குழந்தைக்கு தொடர்பு உடையவராக இருப்பார். இந்த முறையில் ஆணின் விந்தணு வாடகைத்தாயின் கர்ப்பப் பைக்குள் செலுத்தப்படும். தம்பதியரில் சம்பந்தப்பட்டவரின் மனைவியின் கருமுட்டையைப் பயன்படுத்த முடியாமல் இருக்கும்பட்சத்தில், வாடகைத் தாயாக இருக்கும் பெண்ணின் கருமுட்டையே குழந்தை உருவாக பயன்படுகிறது. மேலை நாடுகளில் மகளுக்காகக் குழந்தை பெற்றுத் தந்த அம்மாக்களும் உண்டு. அக்கா, தங்கைகள் கூட தன் சகோதரிக்காக வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுத் தருவதுண்டு. நம் நாட்டில் இத்தகைய முறையினை ஏற்றுக்கொள்வது கடினம். வேறுவிதமாகச் சொல்ல வேண்டுமென்றால், முதலாவது முறையில் வாடகைத்தாய் தன் கருப்பையை மட்டுமே கொடுக்கிறாள். உயிரணுவும் சினை முட்டையும் தம்பதியினருடையது. இரண்டாவது முறையில் வாடகைத்தாய் கருப்பையோடு தன் சினை முட்டையையும் கொடுக்கிறாள். அதாவது தம்பதியினரில் ஒருவரான கணவனின் உயிரணுவையும், வாடகைத்தாயின் சினை முட்டையையும் கொண்டு கரு உண்டாக்கி குழந்தை பெறுவது. வாடகைத்தாய் முறையாவது, இந்தியாவில் தற்போது வேகமாகப் பரவி வருவதால், அதில் ஏகப்பட்ட முறைகேடுகள், விதிமீறல்கள் நடந்து வந்தன. அதனைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு ஓர் சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
அதன்படி, ‘வாடகைத் தாய் குழந்தை (முறைப்படுத்துதல்) - 2016’ என்ற மசோதா பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணியத்தைப் பாதுகாக்கிறது. வாடகைத்தாய் முறையை வியாபார ரீதியில் செய்துகொள்ள முடியாது. வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிற தம்பதியருக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். கணவன், மனைவி ஆகிய இருவரில் ஒருவர் மலட்டுத்தன்மை உள்ளவராக இருக்க வேண்டும். குழந்தை பெற்றுத்தர வாடகைத்தாயாக அமர்த்தப்படுகிற பெண், கணவன் மனைவி ஆகிய இருவரில் ஒருவரின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும். அவருக்கும் திருமணமாகி குழந்தை இருக்க வேண்டும். வியாபார ரீதியில் பணம் கொடுத்து வாடகைத்தாயாக ஒருவரை அமர்த்தக்கூடாது. வாடகைத்தாய் அமர்த்தி குழந்தை பெற்றுக்கொள்ளத் தம்பதியினருக்குச் சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவர். இதற்கு மத்திய, மாநில அளவில் வாரியம் அமைக்கப்படும். இதில், வேடிக்கை என்னவென்றால், கடந்த சில நாட்களுக்கு முன், கருப்பை இல்லாத பெண்ணுக்கு, தோல் வழியாகக் கருமுட்டையை எடுத்து, இந்தியாவிலேயே முதன்முறையாக வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற வைத்துள்ளனர் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர்கள். இது, மருத்துவ அறிவியலின் அபார வளர்ச்சியைக் காட்டுகிறது.