தேவை நிறைவேறுமா?
5/8/2019 3:12:00 PM
மேட்டூர், பவானிசாகர், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட 15 முக்கிய அணைகளுடன் மொத்தம் 89 அணைகள் பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ளன. இந்த அணைகள் பல்வேறு மாவட்டங்களின் குடிநீர், பாசனம் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்கின்றன. நீலகிரி மாவட்டம் குந்தா, கோவை காடம்பாறை, ஈரோடு, நெல்லையில் உள்ள மலைப் பகுதிகளில் 2,307 மெகா வாட் உற்பத்தி திறன் ெகாண்ட 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றுக்கு அருகில் உள்ள, அணைகளில், மழைக் காலங்களில், தண்ணீர் தேக்கப்பட்டு, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதில், பல அணைகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ளதால், அவை வன விலங்குகள், பறவைகளின் நீராதாரமாகவும் விளங்குகின்றன. தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை வாயிலாக, இந்த அணைகளுக்கு நீராதாரம் கிடைக்கிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அணைகளுக்கு, தென்மேற்கு பருவமழையில் தான் நீராதாரம் கிடைக்கிறது. தென் மேற்கு பருவ மழை, 2018ல், ஒரு சில மாவட்டங்களில் குறைவாக பெய்தது. வட கிழக்கு பருவ மழையும் பொய்த்து போனது. பல அணைகளில் இருந்த நீர், தொடர்ந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட்டது.
மழைக் காலங்களில் 1,500 மெகா வாட் வரையும் மற்ற காலங்களில், 200 முதல் 500 மெகா வாட் வரையும், மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
மழை காலத்தில், மழை பெய்யாத நிலையில், கடும் வெயில் காரணமாக பல அணைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தற்போது நீர் மின் நிலையங்களில் நேற்று மின் உற்பத்தி இரட்டை இலக்கத்திற்கு, அதாவது 80 மெகா வாட்டாக குறைந்தது. நீர் மின் நிலையங்களில் மட்டுமே, 1 யூனிட் மின்சாரத்திற்கு உற்பத்தி செலவு, 75 காசுக்கு கீழ் உள்ளது. இதனால், காலை, மாலை நேரங்களில் ஏற்படும் உச்ச மின் தேவையை சமாளிக்க நீர் மின்சாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.தற்போது, கத்திரி வெயில் துவங்கியுள்ளது. அதனால், பல அணைகள் வறண்டு விடும் நிலையில் உள்ளன. முறையாக துார்வாரப்படாததால் இவற்றின் கொள்ளளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், அணைகளில் முழுக் கொள்ளளவுக்கு நீரை தேக்கி பயன்படுத்த முடியவில்லை. எனவே, அணைகளில் கொள்ளளவு எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய, ஆய்வு நடத்த, பொதுப்பணித் துறை முடிவெடுத்து உள்ளது.
அணைகள் புனரமைப்பு திட்டத்தில், பல்வேறு அணைகளில் கொள்ளளவு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு பாதிப்பு குறித்தும் கண்டறியப்பட்டது. இதேபோல, அனைத்து அணைகளிலும் படிப்படியாக ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இவற்றை அடிப்படையாக வைத்து, கொள்ளளவை மீட்பதற்கு, தேவையான பணிகள், வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.