வெப்ப அலை!
3/2/2023 5:43:44 PM
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பம் பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால், இந்தியாவில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே வெயிலின் தாக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவில். கடந்த 1901ம் ஆண்டுக்கு பிறகு 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அதிகபட்சமாக 29.54 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இதற்கு முன்னதாக 2016ம் ஆண்டு 29.48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது.
மேலும், 1901ம் ஆண்டுக்கு பிறகு 5வது குறைந்தபட்ச வெப்பநிலை பதிவான மாதமாக கடந்த பிப்ரவரி மாதம் உள்ளது. 2016ம் ஆண்டு 16.82 டிகிரி செல்சியஸ், 1912ல் 16.49, 1937ல் 16.45, 2006ல் 16.42, 2023ம் ஆண்டில் 16.31 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அடுத்த மூன்று மாதம் இயல்பைவிட அதிக வெப்ப அலை நாடு முழுவதும் நிலவும் என்று தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை உயர்ந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், யூனியன் பிரதேச செயலாளர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், மார்ச் 1ம் தேதி தொடங்கி அன்றாடம் வெயில் சம்பந்தமான நோய்களை கண்காணிக்க வேண்டும்.
வெப்பத்தால் ஏற்படும் தாக்கங்கள், வெப்ப அலையால் ஏற்படும் நோய்களை எதிர்கொள்ள ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத் துறை மற்றும் சுகாதார ஊழியர்கள் தயாராக இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அத்தியாவசிய மருந்துகள், ஐஸ் பேக், தேவையான மருந்து கருவிகளை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளார். கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இப்போது இருந்தே பொதுமக்கள் தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் பழரசம் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். வெயில் காலம் முடியும் வரை பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்த்தும் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை உட்கொண்டும் உடல்நலனை பாதுகாத்து கொள்வது அவசியம்.