சாதனை போதாது!
9/4/2018 3:29:21 PM
ஆசிய விளையாட்டுப் போட்டி, ஜகார்த்தாவில் நிறைவு பெற்றிருக்கிறது. கபடியில் தன்னிகரற்ற வெற்றிகளைப் பெற்றிருந்தும், இந்த முறை இந்தியா கோட்டை விட்டிருக்கிறது. ஹாக்கியில் கவனக்குறைவால் தங்கக்கனவு கைகூடவில்லை. 4 தங்கப்பதக்கங்கள் கூடுதலாகப் பட்டியலில் சேர்ந்திருந்தால், இந்தியாவின் கவுரவம் கூடியிருக்கும். இருப்பினும், கடந்த காமன்வெல்த் போட்டியைக் காட்டிலும் இந்த முறை சாதித்தது அதிகம். 1951க்குப் பிறகு ஆசிய விளையாட்டில் இந்தியாவின் சிறந்த பங்களிப்பு இதுவே. அந்த ஆண்டு, 51 பதக்கங்களைப் பெற்று 2ம் இடம் பெற்றது. 2010ல் சீனாவில் நடந்த ஆசியப் போட்டியில் 65 பதக்கங்கள் பெறப்பட்டன. இந்த முறை 69 பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன.
இவற்றில் தங்கப்பதக்கங்கள் 15. டெல்லியில் நடந்த ஆசியப் போட்டியில் 19 வெள்ளிப்பதக்கங்கள் வென்றதே சாதனையாக இருந்தது. இந்த முறை 25 வெள்ளி கைகூடியிருக்கிறது. இருப்பினும் பதக்கப்பட்டியலில் இந்தியாவின் இடம் 1994, 2002, 2006, 2014ல் பெற்றதைப் போன்றே எட்டாவதாகவே தொடர்ந்து நீடிக்கிறது. இந்தியாவின் சாதனை போதாது! ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல்’ என்று கூறுகிறார் வள்ளுவர். ஆசியப் போட்டிகளுக்கு சென்ற இந்திய வீரர்கள் 572 பேரில், 200 பேர் 23 வயதுக்குட்பட்டவர்கள். தங்கப்பதக்கங்களில் பாதியை இள ரத்தங்கள்தான் வென்றிருக்கிறார்கள்.
1998 ஆசிய போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் பி.டி.உஷா வெள்ளிப்பதக்கம் வென்றதற்குப் பிறகு இந்தியா இப்பிரிவில் பதக்கம் வென்றதில்லை. இந்த முறை 100 மீட்டர் ஓட்டத்தில் கடைசி 50 மீட்டர்களில் பிரமிக்க வைக்கும் விதத்தில் ஓடி வெள்ளியை வென்றார் டூட்டி சந்த். 400 மீட்டர் ஓட்டத்தில் மகளிர் பிரிவில் ஹீமாதாசும், ஆடவர் பிரிவில் முகமது அனாசும் வெள்ளி வென்று நம்பிக்கை நட்சத்திரங்களாக ஒளிர்கின்றனர். தடகளத்தில் பெற்ற வெற்றிகள் சிறந்தவை என்பதில் ஐயமில்லை. துப்பாக்கிச்சுடுதல், மல்யுத்தம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், பேட்மின்டன், டேபிள் டென்னிஸ் எனப் பல பிரிவுகளிலும் அசத்தலான வெற்றிகள் சாத்தியமாகியிருக்கின்றன.
‘ஆக்கம் அதிர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையா னுழை’ என்கிறது குறள். சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடம் அவன் உள்ள இடத்திற்கே வழிகேட்டு ஆக்கம் போய்ச் சேரும் என்பது இதன் விளக்கம். 2020ல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர்கள் ஆயத்தமாக வேண்டும். ஜகார்த்தா ஆசியப் போட்டிகள் நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. மனதளவிலான ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும் மேலும் வளர்த்துக்கொண்டால், தளராத பயிற்சிகளுடன் பிரமிக்கத்தக்க வெற்றிகள் இந்திய வீரர்களுக்குச் சாத்தியம் என்பது உறுதி.