‘பெயர்’ அரசியல்
1/3/2019 4:55:02 PM
கடந்த சில நாட்களுக்கு முன், அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சென்ற பிரதமர் மோடி, மரினா பூங்காவில் தேசிய கொடியை ஏற்றியப் பின், ரோஸ் தீவு, நீல் தீவு, ஹேவ்லாக் தீவுகளுக்கு, முறையே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீப், ஷாஹித் தீப் மற்றும் ஸ்வராஜ் தீப் என்று புதிய பெயரை சூட்டினார். உத்தரப்பிரதேச மாநிலம் ‘அலகாபாத்’ நகரின் பெயரை ‘ப்ரயாக்ராஜ்’ என்று மாற்றம் செய்யப்படும் தீர்மானம் அம்மாநில அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. ‘பெயர் மாற்றம் மகா கும்பமேளாவுக்கு முன்னர் செய்யப்படும்’ என, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். அதன்படி, ‘ப்ரயாக்ராஜ்’ பெயர் மாற்றம் உட்பட நாட்டில் உள்ள 25 நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆனால், ‘உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத்தை அயோத்தியா என்று பெயர் மாற்றம் செய்வதற்கான பரிந்துரையை, மாநில அரசிடம் இன்னும் வழங்கவில்லை’ என்று மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தின் பெயரை ‘பங்களா’ என்று பெயர் மாற்றம் செய்வதற்கான ஒப்புதலை, இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இவ்விவகாரம் நிலுவையில் உள்ளது. மேற்கு வங்கத்தின் பெயரை ‘பங்களா’ என்று மாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி போராடி வருகிறார். மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசின் அனுமதிக்கும் அனுப்பிவைத்தார். ஆனால், அந்தத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் முன்னரே நிராகரிக்கப்பட்டது.
சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில், கிழக்கு வங்காளமும் மேற்கு வங்காளமும் ‘வங்காளம்’ என்ற ஒரே பெயரில் இருந்தன. ஆனால், சுதந்திரத்திற்குப் பின்னர் கிழக்கு வங்காளம் கிழக்கு பாகிஸ்தானாகி, இப்போது ‘வங்கதேசம்’ என்ற தனிநாடாக மாறிவிட்டது. அப்போதே, மேற்கு வங்காளத்தில் இருக்கும் ‘மேற்கு’ அர்த்தமற்றதாகிவிட்டது. ஆகையால், மொழி அடையாளத்துடன்கூடிய ‘பங்களா’ எனும் பெயரை மம்தா பானர்ஜி பரிந்துரைத்தார். ஆனால், அது அரசியல் காரணங்களுக்காக இன்னும் ஏற்கப்படவில்லை. வடமாநிலங்களைப்போல், தமிழகத்திலும் ெபயர்மாற்றம் அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளதாக, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, ‘பிற மொழிகளில் உள்ள ஊர்கள், சாலைகளின் பெயர்கள் தமிழில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான முயற்சிகளை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் 3,000 பிறமொழிப் பெயர்கள் சேகரிக்கப்பட்டு, அவை தமிழில் மொழிமாற்றம் செய்ய தயாராக உள்ளன’ என்றார். அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர், ‘ட்ரிப்ளிகேனி’ திருவல்லிக்கேணியாகவும், ‘டூட்டிகொரின்’ தூத்துக்குடியாகவும் மாறும். பெயர் என்பது சமூகம், கலாசாரம், பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வியலுடன் தொடர்புடையது. அவற்றை, தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக மாற்றுவது, வரலாற்று பிழைக்கு வழிவகுக்கும்.