தடுமாற்றம்
8/30/2018 3:29:51 PM
வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ரூ.70.59 என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஒரே மாதத்தில் லிட்டருக்கு ரூ.2 உயர்ந்திருக்கிறது. இரண்டுமே இந்தியப் பொருளாதாரத்தை மட்டுமல்ல; சாமானியர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க டாலரில் பணம் கொடுக்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதும், பெட்ரோலியப் பொருட்கள் தேவை அதிகரித்து வருவதும் டாலர் மதிப்பு உயர்வதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. 2018 மார்ச் 31ல் ஒரு டாலருக்கு இந்திய கரன்சி மதிப்பு ரூ.65.07 ஆக இருந்தது. துருக்கி நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து பல நாடுகளில் நாணய மதிப்புகள் வீழ்ச்சியடைந்தன.
கடந்த 14ம் தேதி முதன்முறையாக டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ரூ.70.09 வரை அதிகரித்தது. நேற்று டாலர் மதிப்பு கிடுகிடுவென அதிகரித்து ரூ.70.59 ஆக உயர்ந்தது. எண்ணெய் உற்பத்தி செய்யும் ஓபெக் நாடுகள் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 69.03 டாலர் என நிலையாக இருந்தது. எனினும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் தேவையால் டாலர் மதிப்பு அதிகரித்து டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தது என்கின்றனர் நாணயச் சந்தை
டாலர் மதிப்பு உயர்ந்தால் ஏற்றுமதி உயரும் என்பது சாதகமான அம்சம் என்றாலும், அது நிலைத்தன்மையுடையதாக இருக்க வாய்ப்பில்லை. ஏற்றுமதியாளர்களுக்குச் சவால் தர பிற நாடுகளும் காத்திருக்கின்றன. இறக்குமதி பொருட்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால், இந்தியா போன்ற பெரும் நுகர்வு உள்ள நாடுகளுக்குப் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும். சென்னையில் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.73.69 ஆகவும், பெட்ரோல் ரூ.81.22 ஆகவும் அதிகரித்திருக்கிறது. ஒரே மாதத்தில் லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ள நிலையில், லிட்டர் விலை ரூ.100ஐத் தொட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயரும்போதெல்லாம் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரிக்கும்.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்தாலும், மத்திய அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை. டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியும், பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். பிரிப்பது கடினம். இதன் தாக்கத்தை எதிர்கொள்ள வழி தெரியாமல் தடுமாறுகிறோம் என்பது உண்மை.