பளிச்சிடாத நம்பிக்கை
8/28/2018 4:15:54 PM
கோடிக்கணக்கில் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல், வங்கிகளை ஏமாற்றிய தொழிலதிபர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இதனால், மொத்தம் ரூ.14.70 லட்சம் கோடி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் இருப்புப்பட்டியலில் ‘அசையாமல்’ இடம் பிடித்திருக்கிறது. வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பொதுமக்களின் பணத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, வங்கிகளின் வராக்கடனை வசூலிக்க ஐபிசி எனப்படும் வங்கிக்கடன் மற்றும் திவால் சட்டத்தைக் கடந்த ஆண்டு கொண்டு வந்ததோடு, அதை நிறைவேற்றும் பொறுப்பை ரிசர்வ் வங்கியிடம் வழங்கியது. கடந்த பிப்ரவரியில் இந்தச் சட்டத்தைக் கடுமையாக்கிய ரிசர்வ் வங்கி, கடன் பெற்ற நிறுவனங்கள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த 6 மாத கால அவகாசம் வழங்கியது. தவறினால் கடன் பெற்ற நிறுவனங்கள் ஜப்தி செய்யப்படும் என்று அறிவித்தது.
இதைத் தொடர்ந்து சில பிரபல நிறுவனங்கள் பணத்தைத் திரும்பச் செலுத்தத் துவங்கின. முழுமையாகச் செலுத்தாவிட்டாலும் பகுதி பகுதியாக பணத்தைத் திரும்பச் செலுத்துவதே ஆரோக்கியமான அறிகுறிதான். அதேசமயம், 6 மாத அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பல நிறுவனங்களிடம் இருந்து கடன் திருப்பிச் செலுத்துவதற்கான உத்தரவாதம் கிடைக்கப்பெறவில்லை. முதல் கட்டமாக, ரூ.3.60 லட்சம் கோடி கடன் தொகையைத் தங்கள் வசம் வைத்துள்ள 70 நிறுவனங்கள் மீது ரிசர்வ் வங்கி தனது பார்வையைத் திருப்பியிருக்கிறது. ரிசர்வ் வங்கி நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக இந்நிறுவனங்கள் பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்திருக்கின்றன.
ஆனால், பொதுமக்களின் பணத்தைப் பாதுகாப்பதற்காக, உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை ஒட்டுமொத்தமாக எடுத்து விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டிருக்கிறது. இது ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் உள்பட வங்கி அதிகாரிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கோடிக்கணக்கில் கடன் பெற்ற நிறுவனங்களின் பின்னணியில், அரசியல் தலையீடு மட்டுமல்லாது வங்கி உயர் அதிகாரிகளின் நிர்பந்தமும் இருந்திருக்கிறது. முதலிலேயே நடவடிக்கை எடுத்திருந்தால், கடன் தொகையை வசூலித்திருப்பது எளிதாக இருந்திருக்கும். இதனால் தற்போது சாமானியர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சிறிய கடனுதவியைப் பெற்று அதைத் திருப்பிச் செலுத்த முடியாத விவசாயிகள் உள்ளிட்டோரிடம் ஜப்தி உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ளும் வங்கிகள், கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ள தொழிலதிபர்களை அணுகக்கூட இயலாத நிலையில் இருக்கின்றன என்பதே யதார்த்தம். சில வங்கிகளைத் திவாலாக்கும் அளவு நிலைமை மோசமாக இருந்தும்கூட, சட்டத்தின்பிடியில் இருந்தும், நடவடிக்கைகளில் இருந்தும் பண முதலைகள் தப்பிக்க முயல்கின்றனர். எதிர்காலத்தில் இந்த நிலைமை மாறும் என்ற நம்பிக்கைகூட இன்னும் ஏற்படாதது ஏமாற்றமே!