மனிதாபிமான இதயங்கள்
8/21/2018 3:46:12 PM
சஜிதா ஜாபில்(25), நிறை மாதக் கர்ப்பிணி. கேரள மாநிலம் அலுவா அருகே செங்கமநாட் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முதல் மாடி வெள்ளத்தால் மூழ்கியிருக்கிறது. பிரசவ வலியால் துடித்த சஜிதா, மொட்டை மாடிக்கு வருகிறார். தகவலறிந்து அங்கு வந்த கடற்படையினர் ஹெலிகாப்டரில் டாக்டரை அழைத்து வந்து பரிசோதிக்கின்றனர். சஜிதாவை ஹெலிகாப்டரில் ஏற்றி கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த அரை மணி நேரத்தில் ஆண் குழந்தை பிறக்கிறது. கடற்படையினருக்கு நன்றி சொல்லும் வகையில், மொட்டை மாடியின் தளத்தில் ‘நன்றி’ என்ற வார்த்தை தற்போது பளிச்சிடுகிறது. சாலக்குடியில் வீட்டு மொட்டை மாடியில் ஹெலிகாப்டரை இறக்கி 26 பேரின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார் விமானப்படை பைலட் ராஜ்குமார். அவருக்கு சல்யூட்! இதேபோல், வெள்ளத்தில் சிக்கிய பெண்களை, தனது முதுகை வளைத்து படகில் ஏற்றிய இளைஞன் அனைவரின் உள்ளத்திலும் சிகரமாக உயர்ந்து நிற்கிறார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த சிறுமி அனுப்பிரியா(8), சைக்கிள் வாங்குவதற்காக 4 உண்டியல்களில் 4 ஆண்டுகளாக தந்தை வழங்கிய காசுகளைச் சேர்த்து வைத்திருந்தார். கேரள மக்களுக்கு உதவ தான் சேர்த்து வைத்த ரூ.8246ஐ, தந்தையின் சம்மதத்தோடு அனுப்பிவைத்தார். கனவை விட கருணை பெரிதெனக் கருதிய சிறுமிக்கு ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் இலவசமாக சைக்கிள் வழங்கியிருக்கிறது. திருச்சியில் பார்வையற்றோர் இணைந்து ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள போர்வை, வேட்டி, சேலை உள்ளிட்டவற்றை கேரளாவுக்கு வழங்கியிருக்கின்றனர். பார்வையற்றோரின் இந்தச் சேவை, மற்றவர்களைக் கண்கலங்க வைத்திருக்கிறது.
பையனூரைச் சேர்ந்த சங்கரின் மகள் ஸ்வாகா(18), மகன் பிரம்மா(16) ஆகியோரது பெயரில் குடும்பச் சொத்தாக ஒரு ஏக்கர் நிலம்(மதிப்பு ரூ.50 லட்சம்) எழுதி வைக்கப்பட்டிருந்தது.
இவர்கள் படிக்கும் பள்ளியில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் அதிகாரிகளிடம், இந்த நிலத்தை நிவாரணப்பணிக்காக வழங்குவதாக ஸ்வாகாவும், பிரம்மாவும் அறிவிக்க, அனைவரிடம் வியப்பு! நூற்றாண்டு காணாத கடும் வெள்ளத்தால் கேரள மக்கள் படும் துயரங்களைக் கண்டு தேசமே கலங்கி நிற்கிறது. உதவிகள் குவிகின்றன. இனம், மதம், மொழி கடந்து, கட்சி பேதம் தவிர்த்து ஒன்றுபட்டிருக்கிறார்கள் மக்கள். ‘உணவு, உடைகளைக் காட்டிலும் கேரள மக்கள் மறுவாழ்வுக்கு எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள், கார்பென்டர்கள் என ஏராளமானோர் ேதவைப்படுவர்’ என்கிறார் மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ். கேரள வெள்ளத்தை அதிதீவிர இயற்கைப்பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இது வரவேற்புக்குரியது. கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்தாலும், மனிதாபிமானமுள்ள இதயங்களே கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டைகள் என்பது கேரள வெள்ளத்திலும் நிரூபணமாகியிருக்கிறது!