வெண்மைச் சறுக்கல்!
8/14/2018 3:24:41 PM
பால் உற்பத்தியில் இந்தியா சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளது. 2016-17ல் 16.5 கோடி டன்களாக இருந்த பால் உற்பத்தி, 2017-18ல் 17.6 கோடி டன்களாக உயர்ந்தது. ஆண்டுக்கு 6 சதவீத வளர்ச்சி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ‘உற்பத்தியுடன் ஒப்பிடும்போது, கடந்த 12 மாதங்களில் கொள்முதல் மற்றும் விற்பனை விலை 20 முதல் 25 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது’ என்று கூறுகிறார் இந்திய பால் விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் தல்ஜித்சிங். பாலுக்கு நியாயமான விலை கேட்டு, கடந்த ஜூலை 31ம் தேதி நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினர். தற்போது பால் பவுடர் உற்பத்தியிலும் சிக்கல் நிலவுகிறது. சர்வதேச அளவில் பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பிற நாடுகளில் ஒரு கிலோ பால் பவுடரை ரூ.120க்கு உற்பத்தி செய்ய முடிகிறது. இங்கோ இதற்கு ரூ.200 வரை செலவாகிறது.
சர்வதேசச் சந்தையில் போட்டியிட முடியாமல், நாட்டில் 2 லட்சம் டன் பால் பவுடர், ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது. பசும்பால் லிட்டருக்கு தற்போது வழங்கப்படும் ரூ.16க்குப் பதில் குறைந்தபட்சம் ரூ.27 வழங்க வேண்டும். ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு ரூ.7 மானியம் வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. நாட்டில் பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ள குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் பால் உற்பத்திக்கு ஒரு டன்னுக்கு ரூ.50 ஆயிரம் வழங்குகின்றன. ‘இதுபோன்ற சலுகையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்குப் பால் வழங்க வேண்டும்’ என்று பால் உற்பத்தியாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, 1940களில் பால் வளத்தை அதிகரிக்க கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்தவரான வர்கீஸ் குரியனால் வெண்மைப்புரட்சி துவங்கப்பட்டது. தனது 29வது வயதில் குஜராத் மாநிலம் ஆனந்த் என்ற கிராமத்திற்குச் சென்ற வர்கீஸ், பால் பற்றாக்குறையைப் போக்குவதற்காக கிராமத்தினரை ஒருங்கிணைத்து, பல கூட்டுறவுச் சங்கங்களைத் துவங்கி அதன் மூலம் பால் உற்பத்தியைத் துவக்கினார். இதன் மூலம் பால் உற்பத்தியில் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்தது. இதனால் வெண்மைப்புரட்சியின் தந்தை என வர்கீஸ் அழைக்கப்படுகிறார்.
சாதித்தும் பால் உற்பத்தி விவசாயிகளுக்கு லாபகரமானதாக அமையவில்லை என்பதும், நாடு முழுவதும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் குடும்பத்தினருக்குத் தேவையான பாலை வாங்க முடியவில்லை என்பதும் முரண்பாடுகள். சாதனைகளினூடே சறுக்கல்களையும் சரி செய்வதுதானே சிறந்தது!