கஷ்டமான பயணம்!
8/13/2018 4:01:47 PM
சிலரது பணிகளின் முக்கியத்துவம், வெளிச்சத்துக்கு வருவதில்லை. இதில், ரயில்வே கேட் கீப்பர்களின் பணிகளைக் கட்டாயம் குறிப்பிடலாம்.
தமிழகத்தில் மட்டும் 2232 ரயில்வே கேட்களில் கேட் கீப்பர்களாக 800 பெண்கள் உள்பட சுமார் 5 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். ஏராளமான ரயில்வே கேட்கள் பணியாளர்கள் இன்றி உள்ளன. நகரம், கிராமங்களில் மட்டுமின்றி, ஆள் நடமாட்டமே இல்லாத பகுதிகள், வனத்தையொட்டிய இடங்கள், நெடுஞ்சாலைகள், விளைநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் ரயில்வே கேட்கள் அமைந்துள்ளன. பாதுகாப்பு வசதிகள் இன்றி கேட்கீப்பர்கள் பணிபுரிகின்றனர். தண்ணீர், கழிவறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இவர்களுக்குக் கிடையாது. அதிலும் பெண் தொழிலாளர்கள் படும் சிரமத்துக்கு அளவே இல்லை. எவ்வளவு தொலைவில் பணிபுரிந்தாலும், இவர்கள் தான் குடிநீரைக் கொண்டு வர வேண்டும்.
கழிவறை வசதி ஒருவேளை இருந்தால், தண்ணீர் இருப்பதில்லை. இயற்கை உபாதைகளுக்கு, அருகில் வீடுகளில் வசிப்போர் கழிவறையை வழங்கி உதவாவிட்டால், திறந்தவெளியைத் தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. தினசரித் தேவை என்பதால், பலர் உதவ முன்வருவதில்லை. திருச்சி அருகே கேட்கீப்பராகப் பணிபுரிந்த பெண் ஒருவர், சிலரால் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது. கேட்கீப்பர்களுக்கான தங்கும் ஷெட்கள் பாதுகாப்பானதல்ல. இவை பெரும்பாலும் தகரத்தாலானவை. மின் வசதியும் கிடையாது. சுற்றுப்புறம் புதர்களால் சூழப்பட்டிருக்கும். பாம்பு, தேள் உள்பட விஷ ஜந்துகளுக்குப் பஞ்சம் இருக்காது. உயிரைப் பணயம் வைத்துத்தான் இவர்கள் பணிபுரிய வேண்டியிருக்கிறது. உயரதிகாரிகள் பலருக்கும், கடைநிலை ஊழியர்களின் சிரமம் புரிவதற்கு வாய்ப்பில்லை.
பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடிக்கு வாரந்தோறும் 2 நாள் மட்டும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ரயில் புறப்படும்போது கேட்கீப்பரும் உடன் வருவார். கேட் எங்கெங்கு உள்ளதோ அதற்கு முன்பு ரயில் நிறுத்தப்படும். கேட்கீப்பர் கேட்டை மூடிவிட்டு வேகமாக வந்து மீண்டும் ரயிலில் ஏறிக்கொள்வார். இவ்வாறு ரயில் பயணம் தொடர்கிறது. இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லை. நவீன வசதிகள் பெருகியுள்ள காலத்தில், இப்படியும் ஓர் அவலம்!
‘கழிவறை, தண்ணீர் வசதிகள் செய்துதர ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கட்டிட வசதியுள்ள கேட் கீப்பருக்கான ஷெட்டுகளில் மேல்நிலை நீர்த் தொட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நிரப்பும் நீருக்கு பில் கொடுத்து தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். கழிவறையற்ற இடங்களில் கழிவறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது’ என்று ரயில்வே அதிகாரிகள் உறுதி கூறுகின்றனர். உடனடியாக இந்த வசதிகள் கிடைத்தால், கேட் கீப்பர்கள் மகிழ்வர். இல்லாவிட்டால், இவர்களது பயணம் கஷ்டத்துடன் தொடரும்.