ஆசியப் போட்டியில் இந்தியா சாதிக்குமா?
8/7/2018 3:02:17 PM
ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தோனேசியாவின் ஜகார்த்தா, பாலேம்பங் நகரங்களில் வரும் 18ல் துவங்கி, செப்டம்பர் 2 வரை நடக்கிறது.
இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 45 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மொத்தம் 40 விளையாட்டுகளில் 462 நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் இருந்து வரும் 540 பேர் கொண்ட அணி, மொத்தம் 34 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.
ஹாக்கி, டேபிள் டென்னிஸ், வில்வித்தை, பாட்மிண்டன், கபடி, தடகளம், மல்யுத்தம், பளு தூக்குதல், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 8 முறை தங்கம் வென்ற பெருமைக்குரிய இந்திய அணி, பின்னர் சறுக்க ஆரம்பித்தது. 1975ல் உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்றதும், 1980ல் மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதும்தான், இறுதியாக இந்திய ஹாக்கி அணி படைத்த சாதனை. ஆசியப் போட்டிகளில் 15 போட்டிகளில் மூன்று முறை மட்டுமே இந்தியா தங்கம் வென்றிருக்கிறது. தற்போதுள்ள அணி இளமையும், அனுபவமும் கலந்ததாக உள்ளதால் இம்முறை தங்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதேபோல் மகளிர் அணியும் நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளதால், இந்தியாவுக்கு ஆசியப் போட்டி முக்கியமானதாக உள்ளது. ஆசியப் போட்டியில் தங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்தினால், ஒலிம்பிக்கில் பங்கேற்கவும், பதக்கம் வெல்லவும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஏப்ரலில் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கத்துடன் மொத்தம் 66 பதக்கங்களைக் கைப்பற்றி பதக்கப்பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்திருந்தது. பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், பளு தூக்குதல், குத்துச்சண்டை ஆகியவற்றில் பதக்கங்களைக் குவித்திருந்தது. இதுபோன்று பதக்கங்களை வெல்வது கடினமானது என்றாலும், ஆசியப் போட்டியை இந்திய வீரர், வீராங்கனைகள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.
2014ல் இந்தியா 11 தங்கம், 9 வெள்ளி, 37 வெண்கலப் பதக்கங்களை வென்று 57 பதக்கங்களைக் கைப்பற்றி 8வது இடத்தையே பிடிக்க முடிந்தது. காமன்வெல்த் போட்டியில் சாதித்திருப்பதால், இந்த முறை பதக்கப்பட்டியலில் இந்தியா முன்னேறக்கூடும். இளைஞர் படை நிரம்பிய நாட்டில், திறனாளர்களைக் கண்டறிவதில் உள்ள குறைபாடுகள், அவர்களுக்குப் போதுமான பயிற்சி கிடைக்காமை, தேர்வு செய்வதில் விளையாடும் அரசியல் போன்றவை தவிர்க்கப்பட்டால், விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சாதித்துக்காட்டுவது எளிதாக இருக்கும்!