உடல் உறுப்பு தான மோசடி
6/14/2018 2:43:35 PM
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் அசோகன் - புஷ்பாஞ்சலி தம்பதியரின் மகன் ஹிதேந்திரன். விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இது நடந்தது 2008ல். இதன் பிறகு, தமிழகத்தில் உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது.
சில ஆண்டுகளில் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது. இறந்த பின்னரும் ஒருவரின் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்குப் பயன்படுவதால், இறந்தவர் உயிருடன் வாழ்வதாகவே உறவினர்களும், நண்பர்களும் நெகிழ்ந்தனர். உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி என்ற பெருமையைப் பெற்றது. உடல் உறுப்பு தானம் செய்ய பலர் தாங்களாக முன்வந்து பதிவு செய்தனர். இவையெல்லாம் வரவேற்கக்கூடியவை. ஆனால், இதன் பின்னணியில் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுவதும், விதிமீறல்கள் நடப்பதும் தற்போது அம்பலமாகியுள்ளன. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மூளைச்சாவுக்கு உள்ளாகும் நபர்களிடம் இருந்து உறுப்புகளைத் தானம் பெற்று உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ெசய்யப்பட்டதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன. குறிப்பாக, உடல் மாற்று அறுவைசிகிச்சை மூலம் பயன்பெற்றோரில் பலர், வெளிநாட்டுப் பணக்கார நோயாளிகளே.
கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளுக்குக் கடும் கிராக்கி நிலவுகிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் லட்சக்கணக்கில் விலை. விபத்தில் தலையில் அடிபட்டு உயிருக்குப் போராடுபவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு மூளைச்சாவு அடைந்துவிட்டால் போதும். அடுத்த கணமே, உடல் உறுப்புகளுக்காக காத்திருப்போர் எந்த மருத்துவமனையில் உள்ளார் உள்ளிட்ட விவரங்கள் கிடைத்துவிடுகிறது. இதன் பின்னணியில் செயல்படும் ஒரு பெரிய வலைப்பின்னல், உறுப்புகளுக்கான விலை பேரத்தைத் துவங்கிவிடும்.
இதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைப்பும், அரசும் உரிய முறையில் செயல்படாததால், உடல் உறுப்பு தானம், உயிர் காப்பதை அடிப்படையாகக் கொள்ளாமல் வர்த்தக நோக்கில் முழுமையாக மாறியிருப்பதைத் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியவில்லை. ஒரு மருத்துவமனையில் நடைபெறும் உறுப்பு தான அறுவை சிகிச்சை, மூளைச்சாவு அடைந்தவர்கள் குறித்த விவரம் போன்றவற்றையும், அவை உரிய முறையில் நடக்கிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனைகளைத் தவிர, அரசு சிறப்புப் பன்னோக்கு மருத்துவமனையில் மட்டுமே உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் நடைபெறுகின்றன. மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இவற்றை மேற்ெகாள்ள வசதிகள் இல்லை. அதற்குரிய கட்டமைப்பு வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம், அரசு மருத்துவமனைகளில் சிகிச்ைச பெறும் சாதாரண ஏழை, எளிய மக்கள் உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற முடியும்.