வணிக குழப்பம்
6/10/2018 2:15:29 PM
சரக்கு மற்றும் ேசவை வரி விதிப்பில்(ஜிஎஸ்டி) முக்கிய அம்சமான இ வே பில்(மின் வழிச்சீட்டு) நடைமுறை, கடந்த ஏப்ரலில் அமலானது. மாநிலங்கள் இடையே சரக்குப் பரிவர்த்தனையின்போது இது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. வர்த்தகர்கள் நலன் கருதி, தமிழக அரசு மாநிலத்துக்குள் சரக்குப் பரிவர்த்தனைக்கு இ வே பில் கட்டாயம் என்ற நடைமுறையைத் தளர்த்தி தாமதமாக அமல் செய்வதாக அறிவித்தது. கடந்த 2ம் தேதி மாநிலம் முழுவதும் இ வே பில் நடைமுறைக்கு வந்தது. மாநில எல்லைக்குள் 50 கி.மீ தூரத்துக்குள்ளும், அதிகபட்சம் ரூ.1 லட்சம் மதிப்பிலான சரக்குகள் கொண்டுசெல்லும்போதும் இ வே பில் தேவையில்லை. ஆனால், நடைமுறையில் வர்த்தகர்களுக்குப் பல்வேறு குழப்பங்கள் உள்ளன.
மொத்த வியாபாரி, தன்னிடம் கொள்முதல் செய்யும் பத்துக்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகளுக்குத் தலா ரூ.90 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஒரே லாரியில் அனுப்பி வைக்கும்போது, அதன் மொத்த மதிப்பு ரூ.9 லட்சமாக இருக்கும். இதுபோன்ற சூழலில் இ வே பில் கட்டாயமாகத் தயார் செய்யப்பட வேண்டுமா என்பதில் குழப்பம் நிலவுகிறது. சமீபத்தில் பழைய இரும்புப் பொருள் வணிகர் ஒருவர், ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்களைக் லாரியில் கொண்டுசெல்லும் போது, தமிழகத்தில் வணிகவரித்துறையின் பறக்கும் படையினர், திடீர் சோதனை நடத்தினர். ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களைக் கொண்டுசெல்ல இ வே பில் தேவையில்லை என்று வணிகர் மன்றாடியும்கூட, இ வே பில் இல்லாவிட்டால், சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் வரிவிலக்குப் பெற்ற நூறு பொருட்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது போன்று, ஒரே பொருளைப் பல வியாபாரிகளுக்கு ஒரே வாகனத்தில் கொண்டுசெல்லும்போது பொருட்களின் மதிப்பு உயர்வதால் இ வே பில் அவசியமா, வரிவிலக்குப் பெற்ற பொருட்களைக் கொண்டுசெல்லும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். வணிகர்களிடம் பொருட்களைப் பறிமுதல் செய்வதாகவும், அபராதம் விதிப்பதாகவும் மிரட்டுவது சிறந்த நடைமுறையல்ல. மாறாக, விதிமுறைகள் குறித்து தெளிவாக எடுத்துச் சொல்வதே சாலச்சிறந்தது. இல்லாவிட்டால் வணிகர்கள் - அதிகாரிகள் இடையேயான இடைவெளி நீளும். இது நல்லதல்ல.
ஜிஎஸ்டி மற்றும் இ வே பில் குறித்த நடைமுறைகளைத் தமிழில் அச்சடித்து வழங்குவது பயனுள்ளதாக இருப்பதோடு, வணிகர்களுக்குத் தேவையற்ற குழப்பங்களையும் களைவதாக இருக்கும். எந்தப் புதிய நடைமுறையும் உடனுக்குடன் அமலாகும்போது வழக்கமான நடைமுறையில் இருந்து விலகுவதால் ஏற்படும் சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். இதற்கு வணிகர்களை நிச்சயம் பலிகடாவாக்கக் கூடாது!