தொழில் முடக்கம்
6/8/2018 2:50:16 PM
விவசாயம் முதுகெலும்பு எனில், தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பும் இதற்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல. ஏழை, நடுத்தர மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளித் தந்ததோடு, வாழ்வாதார ஆணி வேராகவும் இவை இருந்தன. ஆனால், இது தற்போது கடந்த கால வரலாறு.
‘தமிழகத்தில் 2016-17ம் நிதியாண்டில் 2.67 லட்சமாக இருந்த சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், 2017-18ம் நிதியாண்டில் 2.17 லட்சமாக குறைந்துள்ளது.(அதாவது 50 ஆயிரம் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன). தொழில் முதலீடு ரூ.36,221 கோடியில் இருந்து ரூ.25,373 கோடியாகக் குறைந்தது. 18.97 லட்சம் பேர் பணிபுரிந்து வந்த சிறு, குறு தொழில் நிறுவனங்களில் ரூ.13.78 லட்சம் பேர்தான் பணிபுரிகின்றனர்.
ஓராண்டில் மட்டும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்திருக்கின்றனர்’சட்டப்பேரவையில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு, இந்த உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. இதை அதிர்ச்சி தருகிறது என்று சொல்வதைவிட, தமிழக மக்கள் அனைவரும் அறிந்திராத புதிய தகவல் அல்ல என்று கூறுவதே சாலப்பொருத்தம். கோவையில் ஜவுளி மில்கள் முடங்கியிருக்கின்றன. நாட்டில் முதலிடத்தில் இருந்த பம்ப்செட் ஆலைகள் போட்டியைச் சமாளிக்க முடியாமல் காணாமல் போகின்றன. ஆயத்த ஆடை ஏற்றுமதியில் கோலோச்சி வந்த திருப்பூர் சரிவைச் சந்தித்திருக்கிறது. கரூர் ஜவுளி நிறுவனங்கள் கடும் நெருக்கடியில் உள்ளன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி உள்ளிட்டவை தொழில் வளர்ச்சிக்கு உதவாமல், தொழிலை முடக்கிப் போட்டிருக்கிறது.
மின் கட்டணம் அதிகமாக இருக்கிறது. தொழில் நிறுவனத்தினருக்குச் சலுகை காட்டாவிட்டாலும், அவர்களுக்கு உதவுவதற்கு யாரும் இல்லை. இதை மத்திய, மாநில அரசுகள் மறுக்கலாம். அப்படியெனில், இந்தப் புள்ளிவிவரம் தவறாகிவிடுமா? எத்தனை காலம்தான், முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்க முடியும்?
தமிழகத்தில் வேலைவாய்ப்பகங்களில் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. இவர்களில் லட்சக்கணக்கில் பொறியியல் உள்ளிட்ட பட்டதாரிகள் உள்ளனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிவந்தவை சிறு, குறு தொழில் நிறுவனங்கள்தான். இளைஞர் சக்தி மூலம் புதிய இந்தியாவைப் படைக்க முயற்சிப்பதாகக் கூறும் மத்திய அரசு, யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வேலையின்மைதான் நிஜமான சமூகக் கேடு. பெரும் பண முதலைகளுக்கு உதவும் வங்கிகள், இழுத்தடிப்பு யுத்தி மூலம், முன்னேறத் துடிக்கும் இளைஞர்களை உதாசீனப்படுத்துகின்றன. போட்டியைச் சமாளிக்கும் செயல் திறனுடன் தொழில் நிறுவனங்கள் மீள்வதற்கு அரசு கைகொடுக்கத் தவறினால், தமிழகம் இதற்குக் கொடுக்க வேண்டிய விலை அதிகமாக இருக்கும்.