சிறை அனுபவம்
6/7/2018 3:57:41 PM
குற்றம் புரிந்தால், அவருக்கான தண்டனைக்களம் சிறைச்சாலைகள். ஆனால், அவை பள்ளிக்கூடங்களாக இருக்க வேண்டும். யதார்த்தத்தில், அப்படி இருப்பதில்லை. தாங்கள் செய்த தவறுகளுக்கு வருந்தி, விடுதலையாகும்போது திருந்தி வரும் சிறைவாசிகள் எத்தனை பேர்? சூழல் காரணமாக கைதிகளாகி, மனதிற்குள் புழுங்கி வாழ்நாள் முழுவதும் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக்கிடப்பவர்களும் இவர்களில் இல்லாமல் இல்லை. சிறைவாசிகளும் மனிதர்களே. அவர்களுக்கும் நல்லுணர்வுகள் உண்டு என்பதைப் பெரும்பாலானோர் கவனிக்கத் தவறிவிடுகிறோம். கொலை உள்ளிட்ட குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் பலர், சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்காக ஏங்கிக் கொண்டிருப்பர்.
மனதில் ஈரத்துடன் இதை அணுகுவதில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. செய்த பெரும் பாதகத்துக்கு நீண்ட காலத் தண்டனை அனுபவித்துத்தானே ஆக வேண்டும் என்பது ஒருதரப்பினரின் வாதம் என்றால், அவர்களிடமும் மனிதம் காட்ட வேண்டும் என்பது இன்னொரு தரப்பினரது எண்ணம்.எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை புழல் சிறையில் இருந்து 67 ஆயுள் தண்டனைக் கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். 1989ல் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட சந்திரகாசன், தொண்டைப் புற்றுநோயால் போராடி வந்தார்.
‘சிறைச்சூழலை சோலை போல் மாற்றிக்கொண்டேன்’ என்று கூறும் சந்திரகாசன், உணவக மேலாண்மை, சமையல் கலையில் 6 டிப்ளமோக்கள் மற்றும் பட்டப்படிப்பை சிறைக்காலத்தில் வெற்றிகரமாக பூர்த்தி செய்திருக்கிறார். மருத்துவக்காரணங்களுக்காக தற்போது அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
சிறையில் விடுதலையான 67 ஆயுள் கைதிகளுக்கும் மத்திய சிறைச்சாலைகளில் அமைக்கப்பட உள்ள பெட்ரோல் நிலையங்களில் பணி வழங்கப்படும் என்று சிறைத்துறைத் தலைவர் கூடுதல் டிஜிபி அசுதோஷ் சுக்லா உறுதியளித்திருக்கிறார். இது வரவேற்புக்குரியது. ஏனெனில், சிறையில் இருந்து விடுதலையாகி வருபவர்களுக்கு, சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பதே இன்றளவும் யதார்த்தம். பணி கிடைத்தால், அவர்கள் எதிர்மறை உணர்வுகளுக்கு ஆளாக மாட்டார்கள்.
ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மத்திய சிறையில் நடந்த கொடூரச் சம்பவம் வேதனைக்குரியது. 46 வயது சிறைவாசியின் தலையில் கல்லைப் போட்டு 19 வயதான சிறைவாசி கொலை செய்திருக்கிறார். இருவருமே அடிதடி வழக்கில் கைதானவர்கள். ஒரே அறையில் அடைக்கப்பட்டு, பின்னர் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டவர்கள். தன் தாயைக் கேவலமாகப் பேசியதால் ஆத்திரத்தில் 46 வயது சிறைவாசியை கொன்றதாக 19 வயது சிறைவாசி வாக்குமூலம் அளித்திருக்கிறார். பக்குவப்படுவதற்காகத் தான் சிறைக்கூடங்கள்! ஆனால், அனுபவம் வேறாகத்தான் இருக்கிறது!