மக்களவைத் தேர்தல் எப்போது?
6/4/2018 2:27:15 PM
தற்போதைய மக்களவைப் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிகிறது. ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, அருணாசலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு 2021ல் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். ‘ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால், செலவுகள் குறையும். தலைவர்கள் பிரசாரத்திற்குச் செல்வதும் எளிதாகும். நிர்வாகங்கள் முடங்காது’ என்று பாரதிய ஜனதா இதற்குக் காரணம் கூறுகிறது. இதை பிற அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதேசமயம், மக்களவைத் தேர்தலுடன் பேரவைத் தேர்தல்களை நடத்தி முடிக்க பா.ஜ தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. ‘மக்களவை மற்றும் சட்டப்பேரவைப் பதவிக்காலம் முடிவதற்கு 6 மாத காலம் இருக்கும்போதே புதிய தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடச் சட்டத்தில் இடம் இருக்கிறது. இத்தகைய அறிவிப்பைச் சட்டப்படி தேர்தல் ஆணையம் வெளியிட முடியும். மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற யோசனையை மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடர்பாக எங்கள் ஆலோசனைகள் அனைத்தையும் மத்திய அரசிடம் தெரிவித்துவிட்டோம். இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். சரக்குப் போக்குவரத்து வசதிகளும் தேவைப்படும் என்று வலியுறுத்தியுள்ளோம். சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடப்பதை நாங்கள் உறுதி செய்வோம்’ என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் கூறியிருக்கிறார்.
மக்களவை மற்றும் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தலைமைத் தேர்தல் ஆணையரின் கருத்துப்படி தற்போது சாத்தியம் இல்லாததாகவே இருக்கிறது. இருப்பினும் அதற்கான முனைப்பைப் பா.ஜ முன்னெடுக்கக்கூடும். ஒருவேளை அது இயலாவிட்டால், மத்தியப்பிரதேம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுடன் மக்களவைத் தேர்தலை நடத்த பா.ஜ முயற்சிக்கலாம். ஏனெனில், இந்த மாநிலங்களில் பா.ஜ ஆளும் கட்சியாக இருக்கிறது.
பெரும்பான்மை இடங்களை நெருங்கி வந்தும் கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க இயலாத நிலை, நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு பா.ஜ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், இதுவரை இது ஓர் அரசியல் யூகம்தான். சாமானிய மக்களின் ஒரே திருவிழா தேர்தல் என்றாலும், அதிலும் பிரதான அரசியல் கட்சிகளின் திட்டமிடல்கள்தான் ‘ராஜாங்கம்’ நடத்துகிறது!