பிளஸ் 1 புதுமை
5/30/2018 3:55:37 PM
மாணவர்கள், மதிப்பெண் வாங்கும் இயந்திரங்கள் அல்லர். எழுத்தறிவு ஊட்டப்படும் நேரத்தில் மனனம் அவசியமானதாக இருந்தாலும், அதுவே மாணவனின் திறமையைக் காட்டுவதாக இருக்காது. சிந்தனைக்கும், அறிவுக்கும் வித்திடும் கல்வியே படைப்புத்திறனை உயர்த்தி, ஆற்றல் வாய்ந்ததாக மாணவனைப் புடம்போடும். மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வந்ததால், தமிழக மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் பின்தங்குகின்றனர் அல்லது மனரீதியாகப் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்ற குறைபாடு உள்ளது. மேல்நிலைக்கல்வியில், பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு இருந்தது. பிளஸ் 1 வகுப்புக்குப் பொதுத்ேதர்வு இல்லை. குறிப்பாக கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்கான அடிப்படை, பிளஸ் 1 பாடத்திட்டத்தில்தான் உள்ளது.
ஆனால், பொதுத்தேர்வு என்பதால் பிளஸ் 1 பாடங்களைத் தவிர்த்து, பிளஸ் 2 பாடங்களை பிளஸ் 1 வகுப்பில் நடத்துவதை, குறிப்பாக தனியார் பள்ளிகள் மேற்கொண்டு வந்தன. இதனால், மாணவர்கள் உயர்கல்வி செல்லும்போது சிக்கலைச் சந்திக்க வேண்டியிருந்தது.கடந்த கல்வியாண்டில் இந்த முறைக்கு பள்ளிக் கல்வித்துறை முற்றுப்புள்ளி வைத்தது. பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்றும், பிளஸ் 2 தேர்வை முடிக்கும்போது பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடங்கிய தொகுப்பு மதிப்பெண் பட்டியல் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த முறைக்குப் பழக்கப்படாத பள்ளி நிர்வாகங்களுக்கு, இது கடும் சோதனையாக இருந்தது. இருப்பினும், காலத்திற்கேற்ப மாற்றம் அவசியமானதுதானே! குறிப்பாக நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்குத் தயாராக, பிளஸ் 1 பாடங்களை மாணவர்கள் ஆழமாகக் கற்பது அவசியம்.
பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண்கள், மாணவனின் அடுத்தகட்ட கல்வி நகர்வுக்கான அடிப்படை மட்டுமே என்பதைப் பெற்றோரும் புரிந்துகொள்ள வேண்டும். இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. 91.3 சதவீதம் மாணவ மாணவிகள்(மாணவிகள் 94.6, மாணவர்கள் 87.4) தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வழக்கம்ேபால் மாணவிகள் சாதித்திருக்கின்றனர். பிளஸ் 1 தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் கூறியநிலையில், இந்தத் தேர்ச்சி சதவீதம் சிறப்புக்குரியதே. குறிப்பாக, கணிதம், விலங்கியல் ஆகிய தேர்வுகள் மிகவும் கடினமாக இருந்ததாகக் கூறப்பட்டாலும், தேர்ச்சி விகிதம் நன்றாக உள்ளது. இது மாணவர்களுக்கு நிச்சயம் நம்பிக்கையைக் கொடுக்கும்.
பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்தாலும், பிளஸ் 2 படிப்பதில் மாணவர்களுக்குத் தடையேதும் இல்லை. தேர்ச்சி பெறாத பாடங்களைச் சிறப்புத் துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம். மனன முறையில் இருந்து விடுபட்டு, அறிவுப்பூர்வத் திறனுடன் மாணவர்கள் கல்வி கற்பதற்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பு அவசியம். அரசும் இதற்குத் துணைபுரிய வேண்டும். அதற்கான அச்சாரமாக பிளஸ் 1 தேர்வு முடிவுகளைக் கருதலாம்.