இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
5/29/2018 3:13:54 PM
தன்னெழுச்சிப் போராட்டத்துக்குத் தமிழக அரசு அடிபணிந்திருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்பட்டிருப்பதோடு, உடனடியாக ஆலைக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. 13 பேரின் உயிர்த்தியாகத்துக்குப் பின்புதான், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி, அனைவரது நெஞ்சையும் துளைக்கிறது. இத்தனை நாளாய் எங்கிருந்ததோ தமிழக அரசு? ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. அரசு பாராமுகமாக இருந்ததால், பொதுமக்கள் தொடர்ந்து 99 நாட்கள் போராட்டம் நடத்தினர்.
நூறாவது நாள் போராட்டத்தையொட்டி, கடந்த மே 22ம் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். அன்று துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாயினர். நூறு நாள் போராட்டம் நடத்தும் வரை, ஆளுங்கட்சியின் மக்கள் பிரதிநிதிகளோ, அமைச்சர்களோ அங்கு எட்டிப் பார்க்கவில்லை. குறைந்தபட்சம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட முயற்சிக்கவில்லை. கலெக்டர், அரசின் தலையாட்டிப் பொம்மையாகச் செயல்பட்டார். நூறாவது நாள் போராட்டத்தின்போது 144 தடை உத்தரவு பிறப்பித்த கலெக்டர், திடீரென மாயமானார். போராட்டக்களத்தில் குருவிகளைச் சுடுவதைப் போல் குறிவைத்துப் பொதுமக்கள் சுடப்பட்டனர்.
கலெக்டரையும், எஸ்.பியையும் மாற்றி, புதிய கலெக்டர், எஸ்.பியை மக்களுடன் பேசச் செய்து, பெரும் போலீஸ் படையுடன் சென்று துணை முதல்வர் பன்னீர்ச்செல்வம் மக்களைச் சந்தித்தார். ‘இத்தனை நாள் எங்கே ேபானீர்கள்? நிவாரண உதவி தேவையில்லை’ என்று மக்கள் ஆவேசப்பட்டிருக்கின்றனர். சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, ஆலையை மூடுவதற்கான உறுதியை தமிழக அரசு அளித்து அதைச் செயல்படுத்தியிருந்தால், மக்கள் போராட வேண்டிய அவசியமே இருந்திருக்காது. துப்பாக்கிச்சூடும் நடந்திருக்காது. ஆலை மூடல் அரசாணைக்கு எதிராக ஆலை நிர்வாகம் நீதிமன்றத்தை நாடும். அப்போது, இந்த அரசாணை வலிமையானதாக இருக்குமா என்பது கேள்விக்குறி.
குறிப்பாக, கடும் மாசு ஏற்படுத்தக்கூடிய தாமிர உருக்காலைக்குத் தமிழகத்தில் அனுமதியில்லை என்பது போன்ற கொள்கை முடிவை அரசு எடுத்திருந்தால், இந்த அரசாணை வலுவானதாக இருக்கும். கொள்கை முடிவின்மீது நீதிமன்றம் தலையிடுவதற்கான வாய்ப்பும் குறைவு என்கின்றனர் சட்ட வல்லுனர்கள். நிலத்தையும், நீரையும் கெடுக்கும் ஆலைகள், கோடிகளைக் கொட்டிக்கொடுத்தாலும், எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வாதாரத்தை முழுமையாகக் கெடுக்கும் என்றால் அனுமதி அளிக்க முடியாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபடுத்தாத சிறு, குறுந்தொழில்கள் மீது மாநில அரசு அக்கறை செலுத்த வேண்டும். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் காப்பவையாக அவை இருக்கும். தமிழக அரசின் தொழில் கொள்கையில் இதற்கேற்ப மாற்றம் கொண்டுவருவது காலத்தின் கட்டாயம்!