திருந்தட்டும் அரசு!
5/3/2018 2:50:46 PM
எண்ணமே வாழ்வு.‘தினேஷ் நல்லசிவம் எம்பிபிஎஸ், எம்டி’பிளஸ் 2 தேர்வை எழுதிவிட்டு, மருத்துவப்படிப்பில் சேர, நீட் தேர்வில் வெற்றி பெற முயற்சித்துக் கொண்டிருந்த தினேஷ் நல்லசிவத்தின் நோட்டு, புத்தகங்களில் ‘எம்பிபிஎஸ், எம்டி’ என்ற பட்டம் எப்போதும் பெயருடன் இணைந்துகொண்டிருக்கும். ஆனால், இன்று தினேஷ் இல்லை.நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த கே.ரெட்டியபட்டியைச் சேர்ந்த தினேஷ்(18), பாளையங்கோட்டை ரயில்வே பாலத்தில் தூக்கில் தொங்கினார். அவரது மருத்துவக்கனவு கருகியதற்குக் காரணம், தந்தை மாடசாமியின் குடிப்பழக்கம். தாய் சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட, சித்தப்பாக்கள் பராமரிப்பில் வளர்ந்தார்.
தம்பி, தங்கை என உடன் பிறந்தவர்கள் இருக்க, தந்தையோ ஊதாரியாகத் திரிய, தினேஷ் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஒரு வாரம் முன்பு சென்னை சென்ற தினேஷ், டீக்கடையில் வேலை செய்தார். உறவினர்கள் கண்டித்ததால், சொந்த ஊர் வந்தார். பின்னர், கயத்தார் அருகேயுள்ள பெரியம்மா வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டவர், தற்கொலை முடிவை மேற்கொண்டுள்ளார். ‘தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தாததால் தற்கொலை செய்துகொள்கிறேன். இனியாவது அவர் குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். பிரதமரும், முதல்வரும் தமிழகத்தில் மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் ஆவியாக வந்து மதுக்கடைகளை ஒழிப்பேன்’ என்று மரணத்திற்கு முன் தினேஷ் எழுதிவைத்த கடிதம், அனைவரையும் உருக்கியது.
அவரது மரண வாக்குமூலம், டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கல்லா கட்ட நினைக்கும் தமிழக அரசுக்குச் சாட்டையடி. ‘இனிமேல் மதுவைத் தொட மாட்டேன்’ என்று சத்தியம் செய்திருக்கிறார் அவரது தந்தை. ஆனால், சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்பால் 1300 டாஸ்மாக் கடைகள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டதால், தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு செய்திருக்கிறது தமிழக அரசு. மது அரசுக்கு வருவாயை அள்ளித்தருகிறது. உண்மையாக இருக்கலாம். ஆனால், சமூகத்தைத் தொடர்ந்து கெடுத்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களை மது அழித்து வருகிறது என்றால் மிகையில்லை. பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. கல்வி கற்க வேண்டிய மாணவர்கள், டாஸ்மாக் கடை வாசலில் மது வாங்கத் தவம் கிடக்கின்றனர்.
‘மதுவை ஒழித்துவிட்டால் பிற மாநிலங்களில் இருந்து சாராயம் வருவதும், கள்ளச்சாராயப் புழக்கமும் அதிகரிக்கும்’ என்று அமைச்சர் சொல்கிறார். அதைத் தடுக்க வேண்டியதும் அரசின் கடமைதானே! மதுக்கடைகள் படிப்படியாகக் குறைக்கப்படும் என்பதைக் கொள்கை முடிவாகக் கொண்டு, பெயரளவுக்கு மதுக்கடைகளை மூடிவிட்டு, மதுவில் இருந்து மாநில வருவாயை அதிகரிக்க முயற்சிப்பது அரசின் தவறான நடவடிக்கை. இது தொடர்ந்தால் தினேஷ் போன்றவர்கள் ஆவியாக வந்து பயமுறுத்துகிறார்களோ... இல்லையோ... குடியால் சீரழிந்து உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் இந்த அரசை மன்னிக்காது! திருந்தட்டும் அரசு!