வேகமா விவேகம்!
4/30/2018 2:24:31 PM
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட 2016ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3,321 கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து நூதனமான முறையில் மீண்டும் மதுக்கடைகளைத் தமிழக அரசு திறந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நகராட்சியில் மதுக்கடைகள் திறப்பது குறித்து உச்சநீதிமன்றம் சில விளக்கங்களை அளித்தது. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் கடந்த 2017 செப். 1ம் தேதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உடனடியாக மதுக்கடைகளைத் திறக்க மாவட்ட ஆட்சியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகைமாற்றம் செய்து முறையான அறிவிப்பு செய்யப்படாமல், அங்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டால் உடனடியாக அவற்றை மூட வேண்டும். வகைமாற்றம் செய்யாமல் இனி புதிதாக கடைகளைத் திறக்க தடை விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 1300 கடைகள் உடனடியாக மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு.
ஆனால், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, மூடப்பட்ட கடைகளை மீண்டும் வேறு இடத்தில் அல்லது வேறு வழிகளில் மீண்டும் திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் அதிக ஆர்வம் காட்டியதுதான் விந்தை. பல இடங்களில் இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு போராட்டங்களும் வெடித்தன. போராட்டங்கள் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இத்தகைய நிலையில், மதுக்கடை திறப்பதற்காகவே, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்யும் நூதனத்திட்டத்தை அரசு வகுத்தது என்று சொன்னால் மிகையில்லை.
மதுவால் இளைய தலைமுறை சீரழிந்து கொண்டிருக்கிறது. மதுக்கடைகளை முற்றாக ஒழிப்பதை நோக்கிய பயணத்துக்கு மாறாக கூடுதலாகக் கடைகளைத் திறக்கவும், மூடப்பட்ட கடைகளை எத்தகைய வழியிலாவது மீண்டும் திறப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்வது சிறந்த அரசுக்கு அழகல்ல. சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வரும் இத்தருணத்தில், சாலை விபத்துகளுக்குப் பெரும்பாலும் அடிகோலுவது போதையால் வாகனங்கள் இயக்கப்படுவதுதான் என்பதையும் அரசு எண்ணிப்பார்க்க வேண்டும்! மது விற்பதற்கு வேகம் காட்டுவது விவேகம் அல்லவே!