இதயத் துடிப்பு
4/27/2018 2:32:22 PM
2019 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) அறிவித்திருக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து என 8 நாடுகள் தர வரிசை அடிப்படையில் நேரடித் தகுதி பெற்றிருக்கின்றன. இங்கிலாந்தில் 2019 மே 30ல் துவங்கி ஜூலை 14 வரை போட்டிகள் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.1983ல் யாருமே எதிர்பாராத வகையில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி பலம் பொருந்திய மேற்கத்திய தீவுகளை இறுதிப்போட்டியில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இதற்குப் பிறகு, 2011ல் டோனி தலைமையிலான அணி அபாரமாக ஆடி, கோப்பையைக் கைப்பற்றியது.
அணிக்குத் தலைமை தாங்குவது எளிதல்ல. வீரர்களைத் திறம்பட பயன்படுத்துவது, அணித்தலைவர்கள் கையில்தான் இருக்கிறது. கபிலும், டோனியும் கோப்பையை வென்றதற்கு, அவர்களது முன்னுதாரணத் தலைமை முக்கியக் காரணம். இக்கட்டான நேரத்தில் அணியைச் சரிவில் இருந்து காப்பதில் இருவருமே வல்லவர்கள். 2019 உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதை இப்போதே யூகிக்க முடியாது. இருப்பினும், விராத் கோஹ்லியின் தலைமை நீடிக்கும். வயதானாலும் ஆட்டத்திறனில் மெருகு கூடிக்கொண்டேயிருக்கிறது என்றால், அதற்கு டோனி உதாரணம். ஐபிஎல் போட்டிகளில் டோனியின் அதிரடியைக் கண்டு கோஹ்லியே மிரண்டு போயிருக்கிறார். இளமையும், அனுபவமும் கலந்த வீரர்களைக் கொண்டதாக உலகக்கோப்பைப் போட்டிக்கான அணி இருக்கும் என்பது உறுதி.
இந்தியாவில் திறமைவாய்ந்த கிரிக்கெட் வீரர்களுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால், அவர்களை எந்த இடத்தில், எந்தவிதத்தில், எத்தகைய தருணத்தில் பயன்படுத்துகிறோமோ அதற்கேற்ப அணி வெற்றிகளை ஈட்ட முடியும். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் இளம் வீரர்களின் ஆட்டத்திறன் மலைக்க வைக்கிறது. எதிரணியால் அடிக்க முடியாத இமாலய ஸ்கோர் என்று எதுவும் இல்லை. அதேபோல் குறைவான ஸ்கோர் எடுத்தாலும் எதிரணியை வீழ்த்த முடியாது என்பதும் இல்லை.
பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என ஒட்டுமொத்தமாக அனைத்திலும் திறம்படச் செயல்பட்டால், எந்த அணியையும் வீழ்த்துவது எளிதாகும். பேட்டிங்கில் மட்டும் பலம் வாய்ந்ததாகக் கருதப்பட்டு வந்த இந்திய அணி தற்போது பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கிலும் சிறப்பானதாக இருக்கிறது. உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்று கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்கள் இப்போதே வேகமாகத் துடிக்க ஆரம்பித்துவிட்டன.