மாயை மறைக்கிறது
4/26/2018 2:35:23 PM
மருத்துவப்படிப்பில் சேர்வதற்கு ‘நீட்’ தேர்வு கட்டாயமானதால், சிபிஎஸ்இ பாடத்திட்டம் மீதான மோகம், பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும் அதிகரித்துள்ளது. அதரப்பழசாக இருந்த தமிழக அரசுப் பாடத்திட்டத்தை, சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்குச் சமமாக அல்லது அதற்கும் ஒரு படி மேல் சிறப்பானதாக உருவாக்கப்போவதாகக் கூறிவரும் பள்ளிக் கல்வித்துறை, அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசுப் பாடத்திட்டத்தில், 9, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம் உள்பட மொழிப்பாடங்களுக்குத் தலா முதல் தாள், 2ம் தாள் என்று இரு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், சிபிஎஸ்இ தேர்வில் மொழிப்பாடங்களுக்குத் தலா ஒரு தாள் மட்டுமே உள்ளது.
தமிழக அரசுப் பாடத்திட்டத்தில் மொழிப்பாடங்களுக்கு 2 தாள்கள் இருப்பதால், தேர்வுகளின் எண்ணிக்கை கூடுகிறது. மேல்நிலைக்கல்வியில் பிரதான பாடங்கள் நான்கு. உதாரணமாக கணக்கு மற்றும் அறிவியல் பிரிவில், கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று 4 பிரதானப் பாடங்கள். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் மொத்தம் 8 தாள்கள் தேர்வு எழுத வேண்டும். இந்தச் சுமையை குறைக்கும் வகையில் மொழிப்பாடத்தேர்வுகளில் இரு தாளுக்கு பதிலாக ஒரே தேர்வாக நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த நடைமுறையை வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த முடிவு செய்திருக்கிறது. இதற்காக ஆசிரியர்கள், பள்ளிகள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பில் இருந்து கருத்துருக்கள் கேட்டு பெறப்பட்டிருக்கின்றன.
இதேபோல், மேல்நிலைக்கல்வி பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் 3 பிரதானப் பாடங்களை மட்டும் பாடத்திட்டமாக வைக்கவும் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மொழிப்பாடங்களில் தேர்வுகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் வரவேற்புக்குரியதுதான். அதேசமயம், மொழிப்பாடங்களின் தரத்தைக் குலைக்காமல் அது இருக்க வேண்டும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் மொழிப்பாடங்கள் அவசியமற்றவை என்று கருதும் நிலை உள்ளது. இதற்குக் காரணம், மேற்படிப்புகளில் சேர இந்தப்பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்கள் பலனில்லை என்ற எண்ணம் மேலோங்கியிருப்பதே காரணம். இதே மனநிலை, பெற்றோரிடமும் இருக்கிறது.
அதேசமயம், மொழிப்பாடங்கள்தான், மற்றப் பாடங்களில் சிறப்பதற்கான அடிப்படை என்பதை மாணவர்களோ, பெற்றோர்களோ மறந்துவிடக்கூடாது. இது கல்வியாளர்களுக்கு நிச்சயம் புரியும். எதிலும் சிபிஎஸ்இ திட்டத்தை அப்படியே காப்பியடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சில பாடத்திட்டங்கள் தனித்தன்மையுடன் இருக்கலாம். சமீபத்தில் வெளியான சிபிஎஸ்இ தேர்வு தமிழ்ப்பாடத் தேர்வுத்தாளில் ஏராளமான குளறுபடிகள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இதனால், சிபிஎஸ்இ என்ற மாயையில் தமிழக மாணவர்கள் மட்டுமல்ல; தமிழகப் பள்ளிக் கல்வித்துறையும் சிக்கிவிடக்கூடாது.