திமுகவுக்கு வாக்களிக்காதவர்களையும் யோசிக்க வைக்கிறார் முதல்வர்: அமைச்சர் காந்தி பேச்சு
3/23/2023 5:57:10 PM
பெரம்பூர்: திமுகவுக்கு வாக்களித்தவர்களையும் யோசிக்க வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என எழும்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி பேசினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மக்கள் முதல்வரின் மனிதநேயத்திருநாள் அன்பே ஆன்மீகம் அதுவே தமிழ்ஞானம் எனும் நிகழ்ச்சி எழும்பூர் தெற்குபகுதி செயலாளர் வி.சுதாகர் தலைமையில் எழும்பூர் ரித்தர்டன் சாலையில் உள்ள பிகேஎன் மஹாலில் நேற்று மாலை நடைபெற்றது. அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்புரையாற்றினார்.
திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர அடிகளார், ஸ்ரீவில்லிபுத்தூர் ராமானுஜ ஜீயர் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதைத்தொடர்ந்து அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில், “இறைவனுக்கு செய்வது திருப்பணி. எல்லோருக்கும் செய்வது அறப்பணி. தமிழ்நாடு முதல்வர் பல்லாண்டு வாழவேண்டும். மக்களுக்கு இன்று ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது. கலைஞருக்கு பிறக்கு முதல்வர் மீது நம்பிக்கை வந்துள்ளது.
அவருக்காக அவர் வாழவேண்டும் என்பதைவிட நமக்காக முதல்வர் வாழவேண்டும் என வாழ்த்துகிறோம். கொரோனா காலத்தில் முதல்வர் சபதம் எடுத்தார், கொரோனாவிலிருந்து மக்களை மீட்கவேண்டுமென்று. அடுத்த 2 மாதத்தில் கொரோனா குறைந்துவிட்டது. கொரோனா நிதி 2 ஆயிரம் கொடுத்தார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், ஒவ்வொரு திட்டத்தையும் கலைஞர் போல் செய்கிறார். சொன்னதையும் செய்வார் சொல்லாததையும் செய்வர் முதல்வர். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் ஒட்டுமொத்த உருவமாக முதல்வர் உள்ளார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1.25 கோடிக்கு மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். அறநிலையத்துறையில் கோடிக்கணக்கான சொத்துக்கள் மீட்டுள்ளது.
திமுகவுக்கு வாக்களிக்காதவர்களும் யோசிக்கும் அளவிற்கு செயல்படுகிறார் முதல்வர். தாய்மார்களுக்குதான் குடும்ப கஷ்டம் தெரியும். குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை 1000 ரூபாய் செப்டம்பர் மாதம் முதல் கொடுக்கப்படும்” என்றார். முன்னதாக நிகழ்ச்சியை தேசமங்கையர்க்கரசி தொகுத்து வழங்கினார். பகுதி செயலாளர் வேலு, வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.