கூடுவாஞ்சேரியில் பிரதான சாலை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
3/24/2023 5:35:45 PM
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் பழைய பேரூராட்சி அலுவலகத்துக்கு செல்லும் பிரதான சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது .செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பழைய பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்லும் பிரதான சாலை பழுதானதால் அவற்றை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு ஜல்லிகற்கள் கொட்டப்பட்டன. ஜல்லிகள் கொட்டப்பட்டு கடந்த 2 வாரத்துக்கு மேலாகியும் தார்சாலை அமைக்கும் பணி துவங்கவில்லை. இதனால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கிவிழுந்து காயமடைகின்றனர். மாணவ, மாணவிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர், மாடம்பாக்கம், ஒரத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையை எளிதில் கடப்பதற்காக கூடுவாஞ்சேரி ரயில்வே மேம்பாலம் கீழ் உள்ள சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். சுரங்கப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பழைய பேரூராட்சி அலுவலகம் செல்லும் பிரதான சாலையை தார்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு நிதிஒதுக்கப்பட்டது. அதன்படி கடந்த 2 வாரத்துக்கு முன்பு சாலையில் ஜல்லி கற்கள் பரப்பப்பட்டன.
ஆனால் இதுவரை தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் வழுக்கி விழுந்து எழுந்து செல்கின்றனர். பைக், ஆட்டோ, கார் டயர்களில் ஜல்லிகற்கள் குத்தி பஞ்சராகிவிடுகின்றன. பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பழைய பேரூராட்சி அலுவலகத்துக்கு செல்லும் பிரதான சாலையை தார்சாலையாக மாற்றி போர்க்கால அடிப்படையில் பணியை முடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.