மதுரையில் கூடுதல் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
3/25/2023 5:32:01 PM
மதுரை: நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கடைப்பிடிக்க வேண்டும் என்று மதுரை நீதிமன்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றங்களின் தொடக்க விழா நிகழ்ச்சிகள், மாவட்ட கோர்ட் வளாகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி டி.ராஜா வரவேற்றார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமை தாங்கி, மதுரை மாவட்ட கோர்ட் கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி தொடக்கவுரை ஆற்றினார்.
பின்னர் மயிலாடுதுறை மாவட்ட கோர்ட் மற்றும் செசன்ஸ் கோர்ட்களை மதுரையில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தொடங்கி வைத்தார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் வாழ்த்தி பேசினர். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ராம சுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், தமிழக அமைச்சர்கள் ரகுபதி, மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சென்னை, மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சென்னை ஐகோர்ட் நீதிபதி மகாதேவன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பொதுமக்களுக்கு சேவையாற்றுவது எனது முன்னுரிமை என உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றிருக்கிறீர்கள். பல வரலாற்று மிக்க தீர்ப்புகளை வழங்கி உள்ளீர்கள். பாராட்டுகிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியாகியுள்ளது மிகுந்த சிறப்பு. மகிழ்ச்சி அளிக்கிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை மதுரையில் அமைந்துள்ளது என்றால், அது கலைஞர் கருணாநிதியின் முயற்சி. இந்த விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இன்று அந்த கட்டிடம் மிகவும் கம்பீரமாக உள்ளது. நீதித்துறையின் உள்கட்டமைப்புக்காக சிறப்பாக செயல்படும் அரசாக திமுக அரசு உள்ளது. தமிழ்நாடு அரசு ரூ.106 கோடி 70 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
நீதிமன்ற கட்டிட பணிகளுக்கு 44 புதிய நீதிமன்றம் அமைப்பதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. ரூ.315 கோடி செலவில் சென்னை ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பட்டியல் இன மக்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க நான்கு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது. வழக்கறிஞர் நலநிதி 8 கோடி நல நிதி வழங்கப்பட்டுள்ளது வழக்கறிஞர் சேம நல நிதி ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதுபோன்று பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சமூக நீதி கடைபிடிக்க இதுபோன்று நீதித்துறையின் அனைத்து கட்டமைப்புகளையும் மேம்படுத்த தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு மூன்று வேண்டுகோள், நீதித்துறை தன்னிச்சையாக சட்ட நீதியும் சமூக நீதியும் இணைந்து செயல்பட வேண்டும். சென்னை மும்பை கொல்கத்தாவில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை ஒன்றிய அரசும் உச்ச நீதிமன்றமும் நிறைவேற்றி தர வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழி வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கடைப்பிடிக்க வேண்டும்’ என்றார்.
உச்சநீதிமன்ற நீதிபதி எம்எம் சுந்தரேஷ் பேசும்போது, ‘உலகில் எந்த பகுதியிலும் நடக்காத ஒரு சம்பவம் மதுரையில் நடந்தது. மதுரையில் கார்குழலோடு, கண்களில் நீர் பெருக கண்ணகி நீதி பெற்றார். இளங்கோவடிகள் இதனை தெளிவாக கூறியுள்ளார். மன்னர் தவறாக நீதி வழங்க கூடாது என்பதற்கான நிகழ்வு 2000 ஆண்டுகளுக்கு முன்பே நடந்துள்ளது’ என்றார்.
* தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசும் போது, ‘‘திராவிட மாடல் அரசு, சமூக நீதியை நிலை நாட்ட செயல்பட்டு வருகிறது. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வழியை பின்பற்றுகிறோம். நீட் வழக்கில் மாணவர்களின் கருத்து முக்கியம். மாநில அரசின் நிலைப்பாட்டையும் பார்க்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கருத்து நம்பிக்கை அளிக்கிறது’’ என்றார்.
* உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பேசும்போது, ‘‘மதுரை மூன்று விஷயங்களுக்கு பெருமை வாய்ந்தது. முதல் விஷயம் பெண்களை அதிகாரப்படுத்துவது. மதுரையில் மட்டுமே பெண்ணிடம் இருந்து ஆண்களுக்கு சக்தி கிடைக்கிறது. மற்ற நகரங்களில் ஆண்களிடம் இருந்து பெண்களுக்கு சக்தி கிடைக்கும். இரண்டாவதாக தமிழ் இலக்கியம் வளர்ந்த நகரம் மதுரை. சமண முனிவர்கள் நாலடியார் என்ற சங்க இலக்கியத்தை கொடுத்த ஊரும் மதுரைதான். தூங்கா நகரமாகவும் இவ்வூர் இருக்கிறது. மூன்றாவதாக மதுரை கோவில் நகரமாக இருக்கிறது.
* ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசும்போது, ‘மதுரையின் கோயில் பின்புலமும், வரலாற்று பின்புலமும் ஆச்சர்யமளிக்கிறது. தமிழகத்தின் சட்ட கட்டிடங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் பிற மாநிலங்களை விட மேம்பட்ட நிலையில் உள்ளது.
தமிழ்நாடு முதல்வரும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் இணைந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களைக் கொண்டு திறம்பட குறைகளைக் கண்டறிந்து, நிவர்த்தி செய்யும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த ஆண்டு ரூ.9,000 கோடி மாவட்ட மற்றும் பிற நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்டது. அந்த நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது முக்கியமானது. தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் அந்த நிதியை பயன்படுத்தி, வசதிகளை மேம்படுத்த முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி ‘இ-கோர்ட் வசதிக்காக பெரும் முயற்சியை முன்னெடுத்துள்ளார். ரூ.7,000 கோடி கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பல்வேறு பணிகள் இருக்கும் சூழலிலும், இ-கோர்ட் விவகாரத்தில் அதிக கவனத்தோடும், ஆர்வத்தோடும் ஈடுபட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு நீண்ட காலம் ஆவதை தொழில்நுட்ப வசதி சரிசெய்து, விரைவாக முடிக்க உதவும்’ என்றார்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் பேசியதாவது: ‘‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு. தமிழ் நாட்டிலுள்ள நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு மிக சிறப்பாக உள்ளது. இந்தியாவில் பல்வேறு நீதிமன்றத்தில் காற்றோட்டம் இல்லாமலும், கழிப்பறை இல்லாமலும் உள்ளது. காணொலி நீதிமன்றம் மூலம் மதுரையிலுள்ள சட்ட கல்லூரி மாணவர்கள் உச்சநீதிமன்ற வழக்குகளை கவனிக்க முடிகிறது. தமிழக முதல்வர் தரப்பில் 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த நாட்டிற்குமானது. இணையவழி மூலமாக நீதிபதி டெல்லியில் இருக்கும் வழக்கறிஞர்கள் மேலூரிலோ, விருதுநகரிலோ இருந்து வாதிடலாம். நீதிமன்ற செயல்பாடுகளை நேரலை செய்வதன் மூலமாக சட்டக் கல்லூரி மாணவர்களும் கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும்’’ என்றார்.