உடல்நலக் குறைவால் நடிகர் அஜித்குமார் தந்தை சுப்பிரமணியன் இன்று அதிகாலை காலமானார்.
3/24/2023 5:31:38 PM
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியன் (85), கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாதம் போன்ற உடல் நலக்குறைவால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து நடிகர் அஜித்குமார் வெளியிட்ட அறிக்கையில், ‘எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். அஜித்குமார் தந்தை சுப்பிரமணியன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
*முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நடிகர் அஜித்குமார் தந்தை மறைவு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ‘நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.