ஓட்டேரியில் திமுக சார்பில் பட்டிமன்றம் முதல்வர் தோளில் பொறுப்பை சுமக்கும் காரணத்தால் பொற்காலமாக திகழ்கிறது: அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு
3/24/2023 5:36:42 PM
பெரம்பூர்: ஓட்டேரியில் நேற்று மாலை திமுக சார்பில், தமிழ்நாடு முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதல்வர் தனது தோளில் பொறுப்பை சுமந்திருக்கும் காரணத்தால்தான் தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சியாக திகழ்கிறது என அமைச்சர் சா.மு.நாசர் பேசினார். சென்னை கிழக்கு மாவட்டம், திருவிக நகர் தெற்கு பகுதி, 76வது வட்ட திமுக சார்பில் நேற்று மாலை ஓட்டேரி, பிரிக்ளின் சாலை சந்திப்பு, 5 விளக்கு பகுதியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் கொண்டாடு, வளமாடு, தமிழ்நாட்டை கொண்டாடு எனும் தலைப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி 76வது வட்ட செயலாளர் எஸ்.சசிகுமார் ஏற்பாட்டில், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி கே சேகர்பாபு முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டிமன்றத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாடு தலைநிமிர காரணம் நேற்றைய வேரா, இன்றைய விழுதா எனும் தலைப்பில் மதுக்கூர் ராமலிங்கம் நடுவராகவும் நேற்றைய வேரா எனும் தலைப்பில் அருள்பிரகாசம் மற்றும் அன்னலட்சுமி ஆகியோரும், இன்றைய விழுதா எனும் தலைப்பில் பேராசிரியர் சுந்தரவல்லி மற்றும் பெருந்துறை ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சா.மு.நாசர் பேசுகையில், ஆண்களே பொறாமைப்படும் அளவில் பெண்களுக்கு அனைத்து நலத்திட்டங்களையும் நமது முதல்வர் செய்து வருகிறார். இந்த ஆண்டு 30 ஆயிரம் கோடி பெண்களின் மேம்பாட்டுக்காக, நிதி நிலை அறிக்கையில் நமது முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். அதேபோல், ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் ரூ.1000 கொடுக்கும் திட்டத்தையும் நம் முதல்வர் அறிவித்துள்ளார். ஒரு காலத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையை தனது தோளில் சுமந்த காரணத்தினால், அவற்றை இன்று பலரும் புனிதமாக வணங்கி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாடு இழிவான நிலையில் இருந்தது. நமது முதல்வர் ஆட்சி பொறுப்பேற்று பதவியை தோளில் சுமந்து வரும் காரணத்தினால், தற்போது தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சியாக பல்வேறு வகைகளில் திகழ்ந்து வருகிறது என்றார்.இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.