ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் குடிநீர் நிலையம், குளம் சீரமைப்பு: தமிழ் முரசு செய்தி எதிரொலி
3/23/2023 5:51:52 PM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பல வருடங்களாக மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் பாழடைந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்முரசு நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்த செய்தியின் எதிரொலியாக, நேற்று உலக தண்ணீர் தினத்தையொட்டி ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, மக்களின் பயன்பாட்டுக்கு செயல் அலுவலர் வெங்கடேஷ் துவக்கி வைத்தார்.
இதேபோல் தமிழ்முரசு நாளிதழ் செய்தி எதிரொலியாக, ஊத்துக்கோட்டை பேரூராட்சியின் 5வது வார்டான குயவன்குளத்தில் நேற்று செயல் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் பயன்பாடற்ற நிலையில் படந்திருந்த முட்புதர் காடுகள் மற்றும் குப்பைக் கழிவுகள் அகற்றி, குளம் தூர்வாரி சீரமைக்கப்பட்டன. மேலும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைமை எழுத்தர் பங்கஜம், தூய்மை பணி மேற்பார்வையாளர் செலபதி தலைமையில் தண்ணீர் சேமிப்பு தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு, குயவன்குளம் சீரமைப்பு பணிகளை தொடர்ந்து, இதுகுறித்து செய்தி வெளியிட்ட தமிழ்முரசு நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.